/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முக்கிய ரோடுகளில் மாயமான வடிகால்கள்! மழைக்கு முன் நடவடிக்கை தேவை
/
முக்கிய ரோடுகளில் மாயமான வடிகால்கள்! மழைக்கு முன் நடவடிக்கை தேவை
முக்கிய ரோடுகளில் மாயமான வடிகால்கள்! மழைக்கு முன் நடவடிக்கை தேவை
முக்கிய ரோடுகளில் மாயமான வடிகால்கள்! மழைக்கு முன் நடவடிக்கை தேவை
ADDED : ஏப் 14, 2025 10:15 PM
உடுமலை; பருவமழை காலத்தில், உடுமலை பகுதியிலுள்ள முக்கிய ரோடுகளில், போக்குவரத்து பாதிப்பதை தவிர்க்க, வடிகால் பராமரிப்பில், நெடுஞ்சாலைத்துறையினர் கவனம் செலுத்த வேண்டும்.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அமராவதி பாலம் முதல் கோலார்பட்டி வரையிலான பகுதி உடுமலை உட்கோட்ட பராமரிப்பில் உள்ளது. மேலும், உடுமலை நகரின் மையப்பகுதியில், இந்த தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
மழைக்காலத்தில், அதிக நீர் வரத்து இருக்கும், ஓடைகள், பள்ளம் ஆகியவை தேசிய நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் குறுக்கிடுகிறது.
அப்பகுதிகளில் பாலம் கட்டப்பட்டிருந்தாலும், மழைக்காலத்தில், நெடுஞ்சாலை சேதமடையாமல் தவிர்ப்பதில், ரோட்டை ஒட்டி அமைந்துள்ள வடிகால்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் மழை நீர் இந்த வடிகால்கள் வழியாக சென்று, நெடுஞ்சாலையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம் பகுதியில், ஓடைகளுடன் கலக்கிறது.
இதனால், மழைக்காலத்தில், ரோட்டில் மழை நீர் செல்லாமல், சேதம் தவிர்க்கப்படும். இத்தகைய மழை நீர் வடிகால்கள் பராமரிப்பில், நெடுஞ்சாலைத்துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர்.
இதனால், உடுமலை நகர எல்லையில், வடிகால் அமைப்பு காணாமல் போகும் அளவுக்கு, பல்வேறு கழிவுகள் கொட்டப்படுகின்றன. குறிப்பாக, கட்டட இடிபாடுகளின் கழிவுகள் குவிக்கப்படுவதால், மழைக்காலத்தில், மழை நீர் செல்வது முற்றிலுமாக தடுக்கப்பட்டு, ரோட்டில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
நகர எல்லையிலுள்ள, ராஜவாய்க்கால் பள்ளம், கணபதிபாளையம் பிரிவு போன்ற இடங்களில், வடிகாலில் குப்பை கொட்டுவதை தடுக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டன.
இருப்பினும், போதிய கண்காணிப்பு இல்லாததால், மீண்டும் அனைத்து வகையான கழிவுகள் கொட்டப்படுகிறது.
இதே போல், பல்லடம், தாராபுரம் மாநில நெடுஞ்சாலைகளிலும், வடிகால் அமைப்பு காணாமல் போய் வருகிறது. நகரிலும், தேசிய நெடுஞ்சாலையில், கழிவு நீர் செல்வது தொடர்கதையாக உள்ளது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, தேசிய நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் இணைந்து கழிவுகளை கொட்டுபவர்களை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்மேற்கு பருவமழை துவங்கும் முன், தொடர்கதையாக உள்ள இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண்பது அவசியமாகும். இல்லாவிட்டால், மழை நீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடி போக்குவரத்து பாதிப்பதுடன், ரோடும் குண்டும், குழியுமாக மாறுவதை தவிர்க்க முடியாது.