காணாமல் போன தகவல் பலகைகள் :பிரதான ரோட்டில் சிக்கல்
காணாமல் போன தகவல் பலகைகள் :பிரதான ரோட்டில் சிக்கல்
ADDED : ஏப் 20, 2026 08:16 PM
உடுமலை: தேசிய நெடுஞ்சாலையில், பராமரிப்பில்லாமல் காணப்படும், தகவல் மற்றும் எச்சரிக்கை பலகைகளை பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் ஆற்றுப்பாலம் முதல் அந்தியூர் வரையிலான பகுதி, தேசிய நெடுஞ்சாலைத்துறை உடுமலை பிரிவின் கீழ் பராமரிக்கப்படுகிறது.
தற்போது இப்பகுதியில் மாநில நெடுஞ்சாலைத்துறை வாயிலாக மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஓடுதளம் உறுதிப்படுத்தப்படும் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.
வாகன போக்குவரத்து அதிகமுள்ள இந்த ரோட்டில், முக்கிய நகரங்களின் தொலைவு, கிராம ரோடுகள் சந்திப்பு, விபத்து பகுதிகள், குறுகிய பாலங்கள் உட்பட தகவல் மற்றும் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
பிற மாநில வாகன ஓட்டுனர்களுக்கு உதவியாக இருக்கும் இந்த தகவல் பலகைகள், முறையாக பராமரிக்கப்படாமல், பல இடங்களில், காணாமல் போயுள்ளன; நகரப்பகுதியில், ஒரு பலகையில், கொடி படர்ந்து, தகவல் தெரியாத நிலையில் உள்ளது.
எச்சரிக்கை பலகை இல்லாததால், சில நேரங்களில், விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர், தகவல் மற்றும் எச்சரிக்கை பலகைகளை சீரமைக்க வேண்டும்; தேவைப்படும் இடங்களில், புதிதாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
