/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பயனாளி தேர்வில் குளறுபடி; அரசு செயலரிடம் மனு
/
பயனாளி தேர்வில் குளறுபடி; அரசு செயலரிடம் மனு
ADDED : ஏப் 18, 2025 11:36 PM
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகம் வாயிலாக, இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டருக்கு பயனாளிகள் தேர்வு செய்வதில் குளறுபடிகள் நடக்கின்றன.
இதுதொடர்பாக கடந்த, 10ம் தேதி 'தினமலர்' நாளிதழில் விரிவான செய்தி பிரசுரமானது. இதன் எதிரொலியாக, திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க நிறுவன தலைவர் சரவணன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலர் மதுமதி, கமிஷனர் லட்சுமி ஆகியோரை சந்தித்து, மனு அளித்துள்ளார்.
மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டருக்கு பயனாளி மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்வதில் திருப்பூர் மாவட்டத்தில் பல குளறுபடிகள் நடக்கின்றன. தகுதியற்றவர்கள் மற்றும் ஏற்கனவே ஸ்கூட்டர் பெற்றவர்களையே மீண்டும் பயனாளியாக சேர்த்து பட்டியல் தயாரித்துள்ளனர். இதனால் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் கிடைப்பதில்லை.
இலவச ஸ்கூட்டருக்கு மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்வதில் தொடர் குளறுபடிகள் நடப்பதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்கூட்டர் வழங்கிய பயனாளிகள் விவரம் தொடர்பாக கள ஆய்வு செய்ய உத்தரவிடவேண்டும்.
முறைகேடுகளை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கவேண்டும். தகுதியில்லாத நபர்களுக்கு வழங்கிய ஸ்கூட்டர்களை திரும்பப்பெறவேண்டும்.
இவ்வாறு, அதில் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ முகாமிலேயே
புதுப்பிக்கும் வசதி
திருப்பூர் மாவட்டத்திலுள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தியேட்டர், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களில், மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கான சாய்தளம், கைப்பிடி, சிறப்பு கழிப்பிட வசதிகள் ஏற்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உள்ள குடும்பங்களின் ரேஷன் கார்டுகளை, 35 கிலோ அரிசி வழங்கப்படும் ஏ.ஏ.ஒய்., ரேஷன் கார்டாக மாற்றிக்கொடுக்கவேண்டும். வாரந்தோறும் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனை முகாமிலேயே, மாற்றுத்திறனாளிகளுக்கான பஸ் பாஸ், ரயில் பயண கட்டண சலுகை அட்டைகளை புதுப்பிக்கும் வசதி செய்துதரவேண்டும்.
- மனுவில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்

