ADDED : ஆக 15, 2026 08:31 PM
திருப்பூர், ஆக. 16–
திருப்பூரில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக, ‘மித்ரா’ உதவி மற்றும் குறைகேட்பு மையம் நேற்று தொடங்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் பீஹார், ஒடிசா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட 21 மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் வசிக்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக பின்னலாடைத் தொழிலில் வேலைவாய்ப்பு பெற்று வரும் இவர்களில், தற்போதைய நிலவரப்படி சுமார் 2 லட்சம் பேர் பனியன் தொழிலில் பணியாற்றி வருகின்றனர்.
திருப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அச்சமின்றி, சுதந்திரமாக வசித்து வரும் நிலையில், அவர்களுக்கென தனி உதவி மையம் அமைக்க வேண்டும் என தொழில்துறையினர் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகமும் தொழிலாளர் துறையும் இணைந்து, புலம்பெயர் தொழிலாளர் உதவி மற்றும் குறைகேட்பு மையமான ‘மித்ரா’வை தொடங்கியுள்ளன.
சுதந்திர தினவிழாவின் ஒரு பகுதியாக, கலெக்டர் மனிஷ் நாரணவரே, போலீஸ் கமிஷனர் ராஜேஸ்வரி, போலீஸ் எஸ்.பி., சிருஷ்டி சிங் ஆகியோர் மையத்தை திறந்து வைத்தனர். தொடர்ந்து, மையம் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) உஷா கூறியதாவது:
புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, ‘மித்ரா’ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் துறை அலுவலகத்துடன் இணைந்து இம்மையம் செயல்படும்.
ஞாயிற்றுக்கிழமை தவிர, மற்ற நாட்களில் காலை 9:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை மையம் செயல்படும். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உதவி மற்றும் குறைகேட்புக்காக 94896 76719, 0421–2345100 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
–––
சுதந்திர தினக் கொண்டாட்டத்தை குட்டீஸூடன் மொபைல்போனில் பதிவு செய்யும் தந்தை.
