ADDED : பிப் 23, 2026 06:05 AM

திருப்பூர்: கடந்த பார்லிமென்ட் தேர்தலில், ஈரோடு தொகுதியில், நாம் தமிழர் கட்சி எம்.பி. வேட்பாளராக போட்டியிட்டவருக்கு, காங்கயம் சட்டசபை தொகுதிக்கு எம்.எல்.ஏ. வேட்பாளராக சீட் வழங்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் திருச்சியில், 234 தொகுதிகளுக்கான வேட்பாளரை அறிவித்தார். இதில், திருப்பூர் மாவட்டம் காங்கயம் தொகுதி வேட்பாளராக டாக்டர் கார்மேகன், 67 அறிவிக்கப்பட்டுள்ளார்.
பொது அறுவை சிகிச்சை மருத்துவராக உள்ளார். கடந்த, 2024 பார்லிமென்ட் தேர்தலில் ஈரோடு வேட்பாளராக போட்டியிட்டார்.
7.57 சதவீதம் (82 ஆயிரத்து, 796 ஓட்டு) ஓட்டு பெற்று மூன்றாமிடம் கைப்பற்றினார்.
கார்மேகன்கூறுகையில்,' காங்கயம் தொகுதியின் பிரதான பிரச்னையாக வட்டமலைக்கரை ஓடை துார்வாருதல், அணைக்கு நீர் கொண்டுவருதல் உள்ளது. பி.ஏ.பி., பாசன பகுதியின் கடைமடைக்கு தண்ணீர் வருவது தொடர்பான பிரச்னை, ஆனைமலை - நல்லாறு திட்ட செயல்பாடுகளை வேகப்படுத்துவது, நிலத்தடிநீர் சேமிப்பு, நீர்வழித்தட மீட்பை பிரசார முன்னெடுப்பாக வைக்க உள்ளோம். மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் வாக்குறுதிகள் அளிக்கப்படும்,' என்றார்.
