/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நம்பிக்கையுடன் நடைபோட நவீன செயற்கை கால் திருப்பூருக்கு வருகிறது: மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி
/
நம்பிக்கையுடன் நடைபோட நவீன செயற்கை கால் திருப்பூருக்கு வருகிறது: மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி
நம்பிக்கையுடன் நடைபோட நவீன செயற்கை கால் திருப்பூருக்கு வருகிறது: மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி
நம்பிக்கையுடன் நடைபோட நவீன செயற்கை கால் திருப்பூருக்கு வருகிறது: மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூலை 24, 2025 12:16 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேற்று, 17 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் அளவீடு செய்யப்பட்டது. பல மாத காத்திருப்புக்குப்பின், நவீன செயற்கை காலுக்கான அளவீடு நடத்தப்பட்டதால், மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கால்கள் துண்டிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில், நவீன செயற்கை கால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், கடந்த ஏப்., மாதம் வரை, மாற்றுத்திறனாளிகள் 20 பேர், நவீன செயற்கை காலுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்து காத்திருந்தனர்.
அவர்களுக்கான செயற்கை கால் அளவீடு முகாம், நேற்று நடைபெற்றது. சேலம் ஆர்.ஆர்., ரெமிடிஸ் செயற்கை கால் தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த தொழில்நுட்ப குழுவினர் மூன்று பேர், கால் அளவீடு செய்தனர்.
தாமதம் இருக்காது இது குறித்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் கூறியதாவது:
கால் துண்டிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தில் நவீன செயற்கை கால் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் விண்ணப்பித்து காத்திருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை கால் அளவீடு முகாம் தற்போது நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் 20 பேர் பங்கேற்ற நிலையில், அரசு ஊழியர் என்பதால், ஒரு மாற்றுத்திறனாளியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை இல்லாததால், இருவரின் விண்ணப்பம் தற்காலிகமாக நிராகரிக்கப்பட்டது. மருத்துவ காப்பீடு அட்டை பெற்றபின் மீண்டும் விண்ணப்பிக்க, அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது அளவீடு செய்யப்பட்டுள்ள, 17 பேருக்கு நவீன செயற்கை கால், சேலத்தில் தயாரிக்கப்பட்டு தருவிக்கப்படும். அடுத்த இரண்டு வாரத்துக்குள், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளிநாட்டிலிருந்து உபகரணங்கள் இறக்குமதி செய்து, நவீன செயற்கை கால் தயாரிக்கப்படுகிறது. சாதாரண செயற்கை கால்களில், பாதம் அசைவு இருக்காது. நவீன செயற்கை காலில், பாதம் அசைவு இருக்கும் என்பதால், மேடு, பள்ளங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தடுமாற்றமின்றி நடக்க முடியும்.
சர்க்கரை நோயால் கால் அகற்றப்பட்டவர்கள், சாதாரண செயற்கை கால் பயன்படுத்தும்போது, உராய்வு ஏற்பட்டு, புண்கள் உருவாகவும் வாய்ப்பு உள்ளது. நவீன செயற்கை காலின் உட்பகுதி மிருது தன்மையோடு இருக்கும். அதனால், கால்வலி, புண்கள் ஏற்படாது.
திருப்பூர் மாவட்டத்தில், நவீன செயற்கை கால் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, மருத்துவ சான்று, ரேஷன் கார்டு, ஆதார் நகல், போட்டோ, முதல்வரின் மருத்துவ காப்பீடு அட்டை ஆகியவற்றுடன், அருகாமையிலுள்ள இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
நிலுவை ஏற்படாதவகையில், அடுத்தடுத்து அளவீடு செய்யப்பட்டு, பயனாளிகளுக்கு உடனடியாக நவீன செயற்கை கால் வழங்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.