நவீன இயந்திரம் இயக்க தேவை... பயிற்சி!: 'சமர்த் 2.0' திட்டம் சாத்தியமாக்குமா?
நவீன இயந்திரம் இயக்க தேவை... பயிற்சி!: 'சமர்த் 2.0' திட்டம் சாத்தியமாக்குமா?
ADDED : பிப் 16, 2026 05:43 AM

திருப்பூர்: ''அதிநவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்படும் இயந்திரங்களை இயக்க ஏதுவாக, திருப்பூரில் நிட்டிங், பிரின்டிங் உள்பட 'ஜாப் ஒர்க்' தொழில் பிரிவுக்கும், 'சமர்த் -2.0' திட்டத்தில் தொழிலாளர்களை உருவாக்க வேண்டும்'' என்று பின்னலாடை தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பூருக்கு பின்னலாடை துறையில் பணிபுரிய, திறன் வாய்ந்த ஒரு லட்சம் தொழிலாளர்கள் தேவை என, ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மத்திய, மாநில அரசு திட்டங்களில், திறன் பயிற்சி அளிக்கப்பட்டாலும் கூட, அது உற்பத்தி பிரிவுகளுக்கு மட்டுமே தேவைகளை பூர்த்தி செய்கிறது. பிரின்டிங், நிட்டிங், சாய ஆலைகள் போன்ற 'ஜாப் ஒர்க்' நிறுவனங்களின், புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை இயக்க, திறமையான தொழிலாளர் கிடைப்பது குதிரை கொம்பாக மாறியுள்ளது.
பின்னலாடை பிரின்டிங் தொழில் கடந்த 10 ஆண்டுகளில், 20 மடங்கு தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியுள்ளது. இருப்பினும், புதிய தொழிலாளர்கள் இல்லாததால், பழைய தொழிலாளர்களே, அனுபவ அடிப்படையில் இத்தொழில்களை தொடர வேண்டிய நிலை உள்ளது.
புதிய இயந்திரம் அறிமுகம் ஆகும்போது, ஆப்ரேட்டர்களுக்கு அதிக சலுகைகளை அளித்து பிரின்டிங் நிறுவனங்கள் தங்கள் பக்கம் இழுக்கின்றன. மத்திய அரசின், 'சமர்த்' திட்டத்தில், பின்னலாடை தொழிலுக்கு தேவையான தொழிலாளர்களை உருவாக்க முடிந்தது.
அதாவது, அரசின் நேரடி மானியம், 14 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தொடர் பயிற்சி அளித்து, தொழிலாளர்கள் திறன் படைத்தவர்களாக உருவாக்கப்படுகின்றனர்.
வரும் நிதியாண்டில் செயல்படுத்தப்படும், 'சமர்த் -2.0' திட்டத்தில், பின்னலாடை உற்பத்தி மட்டுமின்றி, இதர பிரிவுகளையும் சேர்க்கலாம் என்று, விதிமுறைகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, நிட்டிங், பிரின்டிங், எம்ப்ராய்டரிங், சாய ஆலைகள், சுத்தி கரிப்பு தொழில்நுட்பம் என, அனைத்து 'ஜாப் ஒர்க்' பிரிவுகளிலும் விரிவான பயிற்சி அளித்து, திறமையான தொழிலாளர்களை உருவாக்க, மத்திய அரசு முன்வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
வாய்ப்பு உருவாகுமா?: பின்னலாடை தொழிலை பொறுத்தவரை, பிரின்டிங் பிரிவில் தான், அடிக்கடி அதிநவீன இயந்திரங்கள் இறக்குமதியாகின்றன. அவற்றை ஆபரேட் செய்ய, பிரத்யேக பயிற்சி பெற்றிருக்க வேண்டும்; அதுபோன்ற தொழிலாளர்திருப்பூரில் மிகக்குறைவு. 'சமர்த் -2.0' திட்டத்தில், பிரின்டிங் தொழில்நுட்ப பயிற்சி அளித்து, திறமையான தொழிலாளர்களை உருவாக்க, அரசு வாய்ப்பு வழங்க வேண்டும். எங்கள் சங்கமும், விரிவான பிரின்டிங் தொழில்நுட்ப பயிற்சி அளிக்க தயாராக இருக்கிறது; திறன்வாய்ந்த பிரின்டிங் தொழிலாளரை உருவாக்க அரசு உதவ வேண்டும்.
- ஸ்ரீகாந்த்: தலைவர்: அசோசியேஷன் - டெக்பா.:
