/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வங்கி கணக்கு துவங்க வைத்து பணம் மோசடி: 4 பேர் கைது
/
வங்கி கணக்கு துவங்க வைத்து பணம் மோசடி: 4 பேர் கைது
வங்கி கணக்கு துவங்க வைத்து பணம் மோசடி: 4 பேர் கைது
வங்கி கணக்கு துவங்க வைத்து பணம் மோசடி: 4 பேர் கைது
ADDED : செப் 21, 2024 10:23 PM

திருப்பூர்,:ஆன்லைன் மூலம் வங்கி கணக்கு துவங்க வைத்து, குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை திருப்பூர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
திருப்பூரைச் சேர்ந்த நபர், தன் இன்ஸ்டாகிராம் கணக்கில் வந்த ஆன்லைன் டிரேடிங் விளம்பரத்தை பார்த்து, அதில் வந்த லிங்க்கில் நுழைந்த போது, வங்கி கணக்கு துவங்குமாறு தெரிவிக்கப்பட்டு வர்த்தகத்தில் இணைக்கப்பட்டார். அதில், டிரேடிங் செய்தததில், 75 லட்சம் ரூபாய் இழந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். எஸ்.ஐ., சையது ரபீக் சிக்கந்தர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.
அதில், சென்னை, எல்லீஸ் நகரைச் சேர்ந்த பாஷம் தவுபீக், 28, மலப்புரத்தைச் சேர்ந்த அப்துல் முனாஸ், 23, சேப்பாக்கம் ேஷக் முகமது, 26 மற்றும் இளையான்குடியைச் சேர்ந்த முகமது ஹர்ஷத், 23, ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிந்து கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து, சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:
மோசடியில் ஈடுபட்ட கும்பல் மக்களிடம் வங்கி கணக்கை உருவாக்கி, குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தியுள்ளது. வங்கி கணக்கு உருவாக்கி கொடுத்தோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தங்களிடம் வங்கி கணக்கை உருவாக்கித் தருமாறு கேட்டால், பொதுமக்கள், அது குறித்து, 1930 எண்ணில் புகார் தெரிவிக்கலாம். சமூக வலை தளங்களில் 'டாஸ்க்' மற்றும் 'ேஷர்' மார்க்கெட்டில் முதலீடு செய்து, குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம் என்று வரும் தகவல்களை நம்பி ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.