/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பெரும்பாலான ஊராட்சிகள் எதிர்ப்பு
/
பெரும்பாலான ஊராட்சிகள் எதிர்ப்பு
ADDED : டிச 03, 2024 07:01 AM
கிராம ஊராட்சிகள் அருகேயுள்ள நகராட்சி மற்றும் மாநகராட்சியுடன் இணைக்கும் அரசின் முடிவு என்பது, கடந்த இரு ஆண்டுகளாக பேசு பொருளாக இருந்து வருகிறது. இணைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பாலான கிராம ஊராட்சி நிர்வாகங்கள், மன்றக் கூட்டங்களிலும், கிராம சபையிலும் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி வைத்திருக்கின்றன.
'கிராம ஊராட்சிகளில் மக்கள் தொகையும், குடியிருப்பும் அதிகரித்து வரும் நிலையில் நகரமயமாக்கல் என்பது அவசியம்; அப்போது தான், மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்பை கூடுதலாக பெற முடியும்; வழங்க முடியும்' என அரசு காரணம் கூறுகிறது.'கிராம ஊராட்சி அந்தஸ்து இழந்துவிட்டால், தேசிய நுாறு நாள் திட்டம் கைநழுவும்; இதனால், அதை நம்பியுள்ள பல ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரம் பாதிக்கும். ஊராட்சிகளின் அடிப்படை வசதிகளுக்கு நிதி ஒதுக்கீடு கிடைக்காது' என, ஊராட்சி தலைவர்கள் புலம்பி வருகின்றனர்.
கார்த்திகேயன், உறுப்பினர்,அவிநாசி ஊராட்சி ஒன்றியம்:
பழங்கரை ஊராட்சியை, எக்காரணம் கொண்டும், திருப்பூர் மாநகராட்சியுடன் இணைக்க கூடாது. அவிநாசி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தும் போது, அதனுடன் இணைக்கலாம். அல்லது, பழங்கரை ஊராட்சியை, பேரூராட்சியாக தரம் உயர்த்தலாம். இதுதான், அனைத்துக் கட்சிகளின் எதிர்பார்ப்பும். இக்கோரிக்கைக்கு முரணாக எது நடந்தாலும், எத்தகைய போராட்டம் நடத்தவும் மக்கள் தயாராக உள்ளனர்.
மந்தராசலமூர்த்தி, தலைவர்,மங்கலம் ஊராட்சி:
ஊராட்சியின் வரி வசூல் நிதியை வைத்து, சுகாதார மேம்பாடு, குடிநீர், சாலை மேம்பாடு உள்ளிட்ட எந்த பணிகளையும் செய்ய முடிவதில்லை. மாநகராட்சியுடன் இணைந்தால், கூடுதல் நிதி, திட்டங்கள் கிடைப்பதற்கு வாய்ப்புண்டு. மக்களுக்கு நலன் பயக்கும் தமிழக அரசின் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொள்வோம்.
பாரதி சின்னப்பன், தலைவர்,ஆறுமுத்தாம்பாளையம்:
ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைப்பதால், பல்வேறு இடையூறுகள் ஏற்படும். இந்த இணைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பதே, ஒட்டு மொத்த கிராம மக்களின் எதிர்பார்ப்பு. இதுதொடர்பாக, கிராம சபை, மன்றக்கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.