ADDED : ஜூலை 09, 2026 05:18 AM

திருப்பூர்: மழைநீர் மற்றும் கழிவுநீரை வெளியேற்றி கான்கிரீட் தரைத்தளம் அமைக்கப்பட்ட நிலையில், தண்ணீர் உறிஞ்சும் மோட்டார் பழுதானதால், எம்.ஜி.ஆர். சிலை அருகே சுரங்கப்பாலப் பணியைத் தொடர்வதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் யுனிவர்சல் ரோடு-பார்க் ரோட்டை இணைக்கும் வகையில், குமரன் சாலை, எம்.ஜி.ஆர். சிலை சந்திப்பில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சுரங்கப்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
மழைநீர் தேங்காமல் இருக்க பாலத்தின் இடதுபுறத்தில் குழி அமைத்து, அதில் தேங்கும் தண்ணீரை அணுகு குழி வழியாக நொய்யல் ஆற்றுக்கு மாற்ற திட்டமிடப்பட்டது. ஆனால், நொய்யலாற்றை ஒட்டிய பகுதியில் குழி தோண்டியபோது நிலத்தடி நீர் தொடர்ந்து ஊற்றெடுத்ததால் பணி பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, 6 எச்.பி. திறன் கொண்ட மோட்டார் வைத்து, 24 மணி நேரமும் தண்ணீர் உறிஞ்சி நொய்யலாற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது.
இந்நிலையில், இரு தினங்களுக்கு முன் மோட்டார் பழுதானதால், கான்கிரீட் தரைத்தளம் அமைக்கப்பட்ட தொட்டி ஒரே நாளில் மீண்டும் தண்ணீர் மற்றும் கழிவுநீரால் நிரம்பியுள்ளது. இதனால், பணிகள் மீண்டும் முடங்கியுள்ளன.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மோட்டார் பழுது ஓரிரு நாளில் சரிசெய்யப்படும். தற்போதுள்ள தண்ணீரை முழுமையாக வெளியேற்றிய பின், தொட்டியின் உட்புறத்தில் பூச்சு வேலை மேற்கொள்ளப்படும். மழைநீர் வடிகால் பணிகள் முடிந்ததும் சுரங்கப்பாலம் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்,'' என்றனர்.
