/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அசுர வேக வாகனங்களால் மடியும் வாயில்லா ஜீவன்கள்
/
அசுர வேக வாகனங்களால் மடியும் வாயில்லா ஜீவன்கள்
ADDED : ஜன 29, 2025 03:37 AM

பல்லடம்; பல்லடம் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் அசுர வேக வாகனங்களால், எண்ணற்ற வாயில்லா ஜீவன்கள் வாழ்க்கையை இழக்கும் பரிதாபம் ஏற்பட்டு வருகிறது.
பல்லடம் வழியாகச் செல்லும் கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கோவை வழியாக கேரள மாநிலத்தை இணைக்கிறது. சரக்கு போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமாக உள்ள இந்த நெடுஞ்சாலை வழியாக, கண்டெய்னர் லாரிகள், சரக்கு வாகனங்கள், டிப்பர் லாரிகள், கறிக்கோழி வேன்கள், ஆம்னி பஸ்கள் உள்ளிட்ட எண்ணற்ற வாகனங்கள் வந்து செல்கின்றன.
அதிகரித்து வரும் வாகன போக்குவரத்து மற்றும் விபத்துகள், உயிரிழப்புகளை கருத்தில் கொண்டு, தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட பின், வாகன விபத்துகள் பெரிதும் குறைந்துள்ளன. ஆனால், வாகனங்களின் வேகம் தான் குறையவில்லை. மாறாக, வாகனங்கள் இடையூறு இன்றி பயணிப்பதால், கண் மண் தெரியாமல் கட்டுக்கடங்காத வேகத்தில் செல்கின்றன. ரோடு விரிவாக்கம் காரணமாக, விபத்து குறைந்துள்ள போதும், வாகனங்களின் அசுர வேகம் காரணமாக, வாயில்லா ஜீவன்கள் பல பலியாகி வருகின்றன.
நாய்கள், பூனைகள், அணில், மயில், குருவிகள், காகம், மைனாக்கள் என, ரோட்டை கடக்க முயற்சிக்கும் எண்ணற்ற வாயில்லா ஜீவன்கள், வாகனங்களின் அசுர வேகத்தால் தங்களது வாழ்க்கையையே இழக்கின்றன.
தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்கள், பெரும்பாலும், நகரப் பகுதிகளில் விதிக்கப்பட்டுள்ள வேக கட்டுப்பாடுகளை பின்பற்றுவதில்லை. இதனால், வாகனங்களின் வேகத்துக்கு வாயில்லா ஜீவன்கள் பலிகாடாகின்றன.
எந்த ஒரு உயிரினமாக இருந்தாலும், அவற்றுக்கும் ஒரு வாழ்க்கை உண்டு என்பதால், வாகன ஓட்டிகளும் சற்று மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும். அசுர வேகத்தை தவிர்த்து, வாகனங்களை கவனத்துடன் இயக்க வேண்டும்.