ADDED : அக் 13, 2024 11:42 PM

திருப்பூர்: திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்ட் பின்புறம், வடக்கு உழவர் சந்தை செயல்படுகிறது. இரவு அல்லது அதிகாலையில் மழை பெய்து விட்டதால், சந்தையில் மழைநீர் தேங்கி, சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.
விவசாயிகள் கூறுகையில், 'கடை முன் தண்ணீர் தேங்கி நிற்பதால், வாடிக்கையாளர் வந்து நின்று பொருள் வாங்க முடிவதில்லை. பலரும் சந்தைக்கு வருவதை தவிர்த்து அப்படியே சென்று விடுகின்றனர்.
சந்தையில் கடை கிடைக்காமல், தரையில் வாழை இலை மற்றும் காய்களை வைத்து விற்பனை செய்பவருக்கு பெரும் சிரமமாக உள்ளது. விளைபொருள் விற்பனை பாதிக்கப்படுகிறது. அலுவலர்கள் பார்வையிட்டு தார்ரோடு அல்லது தரைத்தளம் அமைத்த விவசாயிகளுக்கு உதவ வேண்டும்,' என்றனர்.
உழவர் சந்தை அலுவலர்களிடம் கேட்ட போது, 'மழை பெய்தால், தண்ணீர் தேங்குவது குறித்து போட்டோவுடன் விற்பனைக்குழு உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுப்பார்கள் என காத்திருக்கிறோம்,' என்றனர்.