ADDED : டிச 29, 2024 07:19 AM

குழந்தைகள் மத்தியில் மட்டுமல்லாமல், அவர்களது பெற்றோரையும் பெரிதும் ஈர்த்த 'தி லயன் கிங்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம், 'முபாசா' என்ற பெயரில் திரைக்கு வந்து, சக்கை போடு, போட்டுக் கொண்டிருக்கிறது.
'முபாசா' என்ற சிங்கத்தின் கதையை சுமந்து, பல்வேறு விலங்கினங்களை கிராபிக்ஸ் மற்றும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தில், திரைக்கு கொண்டு வந்து, பிரம்மாண்டத்தில் தத்ரூபத்தை கூட்டியிருக்கின்றனர், படத்தின் தொழில்நுட்ப குழுவினர். '3டி' படம் என்பதும் கூடுதல் சிறப்பு.
தமிழிலும் 'டப்பிங்' செய்யப்பட்ட இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள விலங்குகளின் கதாபாத்திரத்துக்கு முன்னணி நடிகர்கள் அர்ஜுன் தாஸ், அசோக்செல்வன், நாசர், ரோபோ சங்கர், சிங்கம் புலி உள்ளிட்டோர் குரல் கொடுத்திருப்பது, கூடுதல் வரவேற்பைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. 'அரையாண்டு பள்ளி விடுமுறை நாட்களில் இத்திரைப்படம் வெளிவந்திருப்பது, குழந்தைகளுக்கு குஷியை ஏற்படுத்தியிருக்கிறது.
''திருப்பூரில், திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் 'ஹவுஸ்புல்' காட்சிகளாக, படம் ஓடிக் கொண்டிருக்கிறது. 'முபாசா' மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
விடுமுறை நாட்களில் இதுபோன்ற படங்கள் திரைக்கு வருவது, குழந்தைகள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தி கொடுக்கிறது,'' என்கிறார், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுப்பிரமணியன்.

