/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தரை தட்டியது நஞ்சராயன் குளம்; பறவைகள் வலசை பாதிக்குமா?
/
தரை தட்டியது நஞ்சராயன் குளம்; பறவைகள் வலசை பாதிக்குமா?
தரை தட்டியது நஞ்சராயன் குளம்; பறவைகள் வலசை பாதிக்குமா?
தரை தட்டியது நஞ்சராயன் குளம்; பறவைகள் வலசை பாதிக்குமா?
ADDED : ஜூலை 18, 2025 12:13 AM

திருப்பூர்; திருப்பூரில் உள்ள நஞ்சராயன் குளம், 350 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 146 வகை உள்நாட்டு பறவைகள், 43 வகை வெளிநாட்டு பறவைகள் என, இதுவரை, 189 வகை பறவையினங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கடந்த, 2022ல், இக்குளம் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. நீர் வாழ் பறவைகளின் வாழ்விடங்களை பாதுகாக்க வழங்கப்படும், உலகளாவிய அங்கீகாரமான, 'ராம்சர்' அங்கீகாரம், கடந்த, 2024 ஆக., மாதம், இக்குளத்துக்கு வழங்கப்பட்டது.
நஞ்சராயன் குளத்துக்கு நல்லாறு வழியாக வரும் நீர் மற்றும் மழைநீர் தான் ஆதாரம். கடந்தாண்டுகளில் பெய்த தொடர் மழையால் குளத்தில் நீர் நிரம்பி ததும்பியது; அத்துடன், அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டத்திலும், இக்குளத்தில் நீர் நிரம்புகிறது. குளத்தில், 110 வகையான தாவரங்கள் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
''பட்டை தலை வாத்து உள்ளிட்ட வெளிநாட்டு பறவைகள், மரங்களில் ஓய்வெடுக்காது; மாறாக, குளக்கரை, மண் திட்டுகளில் தான் அமர்ந்திருக்கும். ஆண்டு முழுக்க குளத்தில் நீர் தேங்கியிருப்பதால், நீர்வாழ் தாவரங்கள் வளர்வதற்கான சூழல் இல்லை; வலசை வரும் வெளிநாட்டு பறவைகள் மற்றும் கடற்கரையோர பறவைகள் அமர்ந்து இளைப்பாற மண் திட்டு, கரைகளும் தென்படவில்லை என்பதால், குளத்தில் நீர் மேலாண்மையில் கவனம் செலுத்த வேண்டும்'' என, இயற்கை ஆர்வலர்கள் யோசனை தெரிவித்தனர்.
இதனால், குளத்தில் நிரம்பி ததும்பிய நீரை, வெளியேற்ற வனத்துறையினர் ஏற்பாடு செய்தனர். ஆனால், தரை தட்டும் அளவுக்கு நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. பொதுவாக நீரில் மிதக்கும் மீன்கள் தான், உள்ளூர் பறவைகளுக்கு உணவு என்ற சூழலில், உணவுச்சங்கிலி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என, இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அக்., துவங்கி, டிச., வரை, இக்குளத்துக்கு ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வலசை வரும் நிலையில், அதற்குள்ளாக தென் மேற்கு பருவமழை கைக்கொடுத்து நீர் நிரம்புவது அவசியம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
குளத்தில், தரை தட்டும் அளவுக்கு நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. நீரில் மிதக்கும் மீன்கள் தான், உள்ளூர் பறவைகளுக்கு உணவு என்ற சூழலில், உணவுச்சங்கிலி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.