ADDED : ஜன 14, 2025 11:47 PM

திருப்பூர்; தை பொங்கல் பண்டிகையான நேற்று, அனைத்து வீடுகளிலும் வாசலில் சாணத்தால் மெழுகி, வண்ண கோலப்பொடியால் கோலமிட்டு அலங்கரித்தனர். நேற்று, கரும்புகளை நிறுத்தி, வாசலை அலங்கரித்து, விறகு அடுப்பில் பொங்கல் வைத்தனர். பொங்கல் பொங்கியதும், 'பொங்கலோ பொங்கல்' என்று கோஷமிட்டபடி, பச்சரியை பானைக்குள் போட்டு வழிபட்டனர்.
தொடர்ந்து, வெல்லம், பாசிப்பருப்பு, ஏலக்காய் சேர்த்து, நெய் மணக்கும் சர்க்கரை பொங்கல் தயாரித்தனர். தீபம் ஏற்றி வைத்து, துாபம் காண்பித்து, மஞ்சள் விநாயகர் பிடித்து வைத்து வழிபட்டனர். தலைவாழை இலை போட்டு, சர்க்கரை பொங்கல், கடலை பொரி, முறுக்கு, கரும்பு துண்டுகளை வைத்து, சூரியபகவானுக்கு படைத்து வழிபட்டனர். பிறகு அனைவரும் சர்க்கரை பொங்கல் சாப்பிட்டு மகிழ்ந்தனர். புதுமண தம்பதியர், புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து, தலை பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.
தாராபுரம் ரோடு சேரன் தொழிலாளர் காலனியில், தைப்பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தது. பக்கெட் பந்து எறிதல், ஸ்பான்ஞ்ச் கொண்டு பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், பலுான் ஊதி உடைத்தல், பந்து உருட்டை பாட்டிலை தள்ளுவது என, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன.
அதிகாலையில், குபேர விநாயகர் கோவிலில், அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது மாலையில், லக்கி கார்னர் விளையாட்டும், மேடை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு விழாவும் நடந்தது.
திருப்பூர், குமரானந்தபுரம் பண்டிட் தீனதயாள் உபாத்யாய மக்கள் சேவை மையம் சார்பில் பொங்கல் விழா நடந்தது. பொதுமக்கள் கூடி, பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடினர்.
'நிட்மா', ஜீவநதி நொய்யல் சங்கம், திருப்பூர் தெற்கு ரோட்டரி, திருப்பூர் மாநகராட்சி சார்பில், நொய்யல் பொங்கல் விழா - 2025 நடந்தது. கஜலட்சுமி தியேட்டர் ரோடு பகுதியில், பொதுமக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
மண்ணரை சலங்கை ஒலி குழுவினரின் வள்ளிகும்மியாட்டமும், அருணாசலம் குழுவினரின் பவளக்கொடி கும்மியாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பெண்கள் பொங்கல் வைத்த போது, திருப்பூர் பகுதிகளை சேர்ந்த திருநங்கைகளும், பொங்கல் வைத்து விழாவை கொண்டாடினர்.