/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சுருங்கிய' கடை வீதிகள்; 'பொங்கிய' வியாபாரிகள்: பல்லடத்தில் கடையடைப்பு
/
'சுருங்கிய' கடை வீதிகள்; 'பொங்கிய' வியாபாரிகள்: பல்லடத்தில் கடையடைப்பு
'சுருங்கிய' கடை வீதிகள்; 'பொங்கிய' வியாபாரிகள்: பல்லடத்தில் கடையடைப்பு
'சுருங்கிய' கடை வீதிகள்; 'பொங்கிய' வியாபாரிகள்: பல்லடத்தில் கடையடைப்பு
ADDED : ஆக 13, 2025 10:37 PM

பல்லடம்; பல்லடம் கடை வீதியில், அடிப்படை வசதி கள் இல்லை; ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்படுகிறோம் என்று கூறி, வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் மேற்கொண்டனர்.
வணிக வளாகங்கள், காய்கறி மார்க்கெட், வார சந்தை, உழவர் சந்தை உள்ளிட்ட அனைத்தும் ஒருங்கிணைந்த பகுதியாக பல்லடம், என்.ஜி.ஆர்., ரோடு உள்ளது; இங்கு 450க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
கடைகள் மூலம், பல கோடி ரூபாய் வருவாய் நகராட்சிக்கு கிடைக்கிறது. அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, என்.ஜி.ஆர்., ரோடு, தினசரி மார்க்கெட் மற்றும் பஸ் ஸ்டாண்டில் நேற்றுகடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைகளுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
வியாபாரிகள் கூறியதாவது:
25 மீட்டர் அகல என்.ஜி.ஆர்., ரோடு, ஆக்கிரமிப்புகள் காரணமாக, 10 மீட்டராக சுருங்கிவிட்டது. நடைபாதை வியாபாரிகள், நடமாடும் வியாபாரிகள் என, ரோடு முழுவதையும் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துக் கொள்கின்றனர்.
வரி, வாடகைமுறையாக செலுத்தி கடை நடத்தி வரும் வியாபாரிகளுக்கு விற்பனை கடுமையாக பாதிக்கிறது. ரோட்டில் கடை அமைப்பதால், வாகன ஓட்டிகள் பார்க்கிங் செய்ய இடம் இன்றி ரோட்டுக்கு வருகின்றனர்.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடும் கடைவீதி, மார்க்கெட் பகுதிகளில், குடிநீர், கழிப்பிடம், பார்க்கிங் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் நகராட்சி நிர்வாகத்தினரும், போலீசாரும் வேடிக்கை பார்க்கின்றனர்.
இருதரப்பினரும் இணைந்து ஆக்கிரமிப்பு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். கடைவீதியில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு, வியாபாரிகள் கூறினர்.
முன்கூட்டியே பிரச்னைகளை
வியாபாரிகள் கூறியிருக்கலாமே!
நான் பொறுப்பேற்று சில தினங்களே ஆகின்றன. கடைவீதியில் இது போன்ற பிரச்னைகள் உள்ளது என்பது குறித்து வியாபாரிகள் யாரும் என்னிடம் கூறவில்லை. கடையடைப்பு நடத்தும் வியாபாரிகள், முன்கூட்டியே பிரச்னைகள் குறித்து என்னிடமும் கூறி இருக்கலாமே! கடைவீதியை ஒட்டியே பஸ் ஸ்டாண்டில் இலவச கழிப்பிடம் உள்ளதால்,வியாபாரிகள், பொதுமக்கள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். நடைபாதை வியாபாரிகளுக்கு, மாற்று இடம் தேர்வு செய்வதுடன், குடிநீர் வசதிக்கு வழிவகை செய்யப்படும்.
-- அருள்,
நகராட்சி கமிஷனர், பல்லடம்.
அடிப்படை வசதிகள்
மேம்பட வேண்டும்
கடைவீதி ஆக்கிரமிப்புகள் காரணமாக, வாடகைக்கு கடை நடத்துபவர்களால் வாடகை செலுத்த முடியாத சூழல் உள்ளது. அரசு அறிவித்த கொரோனா கால வாடகை தள்ளுபடியை முழுமையாக ரத்து வேண்டும். கடைவீதிக்கு வரும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வியாபாரிகள் கழிப்பிட வசதி இன்றி சிரமப்படுகின்றனர். கடைவீதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். நடைபாதை வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும்.
- கண்ணையன்,
தலைவர்,
வணிகர் சங்க பேரமைப்பு.