/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய நீச்சல் போட்டி: மாற்றுத்திறனாளி மாணவர் தேர்வு
/
தேசிய நீச்சல் போட்டி: மாற்றுத்திறனாளி மாணவர் தேர்வு
தேசிய நீச்சல் போட்டி: மாற்றுத்திறனாளி மாணவர் தேர்வு
தேசிய நீச்சல் போட்டி: மாற்றுத்திறனாளி மாணவர் தேர்வு
ADDED : அக் 18, 2024 06:34 AM

அவிநாசி : கோவாவில் நடைபெறும் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்க அவிநாசி அரசு பள்ளி மாற்றுத்திறனாளி மாணவர் தேர்வு பெற்றுள்ளார்.
பழங்கரை ஊராட்சி, அவிநாசிலிங்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. பனியன் நிறுவன தொழிலாளி. இவரது மகன் சபரிஆனந்த், 12. முதுகு தண்டுவடம் பாதிப்பு ஏற்பட்ட மாற்றுத்திறனாளியான சபரிஆனந்த், அவிநாசிலிங்கம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 7ம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுவயல் முதலே நீச்சல் போட்டியில் ஆர்வம் கொண்ட இவர் தேனி மாவட்டத்தில் நடைபெற்ற மாநில அளவிலான பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில், 50 மீ., ப்ரீ ஸ்டைல், 50 மற்றும் 100 மீ., பேக் ஸ்ட்ரோக் ஆகிய பிரிவுகளில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
தொடர்ந்து, புதுக்கோட்டையில், நடைபெற்ற மாநில அளவிலான பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் தங்கம் மற்றும் 8ம் தேதி கோவை அமிர்தா பல்கலையில் நடைபெற்ற பாராலிம்பிக் மாநில அளவிலான நீச்சல் போட்டியில் மூன்று பிரிவுகளில் முதலிடம் பெற்றார்.
இதனால், கோவாவில் 19ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற உள்ள தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். இதுதவிர, புதுச்சேரியில் நடைபெற்ற கடல் நீச்சல் போட்டியில், அரை கிலோ மீட்டர் துாரம், நீந்தும் போட்டியில் கலந்து கொண்டு பதக்கம் பெற்றுள்ளார்.
சபரிஆனந்துக்கு திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் பழநி (தொடக்கக்கல்வி), மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் கரோலின், சிறப்பு ஆசிரியர் லீமா, தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.