/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நீரா' மகத்துவம்; அளிக்க வேண்டும் முக்கியத்துவம்
/
'நீரா' மகத்துவம்; அளிக்க வேண்டும் முக்கியத்துவம்
ADDED : ஜூலை 14, 2025 12:44 AM

பல்லடம்; ''விவசாயிகளுக்கு நான்கு மடங்கு வருமானம் தரும் 'நீரா' பானத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லவும், மக்களிடம் கொண்டு சேர்க்கவும் உதவும் வகையில், தனி கமிட்டி அமைக்க வேண்டும்'' என, மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுஹானிடம், பல்லடம் உலகத் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கோவை 'கொடிசியா'வில் நடந்த 'அக்ரி டெக்ஸ்' கண்காட்சிக்கு வந்த சிவராஜ் சிங் சவுஹானிடம், இதன் இயக்குனர் பாலசுப்பிரமணியன் அளித்த மனு:
சந்தையில் விற்பனையாகும் குளிர் பானங்கள் அனைத்தும், குறிப்பிட்ட சில தினங்களில் காலாவதி ஆகிவிடும். ஆனால், நீரா பானம் மட்டுமே, 18 மாதங்கள் சுய வாழ்நாள் கொண்டது.
இப்படிப்பட்ட இயற்கை பானத்தை, பல்லடத்தில் உள்ள உலகத் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், 'தென்னீரா' என்ற பெயருடன் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். இதில், 1,200க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி 'நீரா' பானத்தை பாதுகாத்து வைத்து விற்பனை செய்கிறோமே தவிர, சர்க்கரை, ரசாயனம் உள்ளிட்ட எந்த ஒரு இணை பொருட்களும் சேர்க்கப்படுவதில்லை. இது, எப்.எஸ்.எஸ்.சி., 22000 சர்வதேச தரச் சான்று பெற்ற பானமாகும்.
'நீரா' பானத்தின் மகத்துவத்தை உணரச் செய்ய, மத்திய, மாநில அரசுகள் இதற்கு உதவினால்தான், விவசாயிகளின் வாழ்வாதாரம் நான்கு மடங்கு உயர்வதுடன், பொதுமக்களின் ஆரோக்கியமும் மேம்படும். இதை, அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது மத்திய, மாநில அரசுகளின் கையில்தான் உள்ளது. அரசு சார்ந்த கூட்டங்கள், விழாக்கள் மற்றும் ரயில்வே, சுற்றுலாத்துறை ஆகியவற்றின் மூலம் இதை எளிதில் மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும். இதற்காக ஒரு கமிட்டியை அமைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர வழிவகை செய்யுங்கள்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.