ADDED : ஏப் 03, 2026 07:49 PM

திருப்பூர்:'நீட்' தேர்வுக்கான சிறப்பு வகுப்பு தாமதமாவதால், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
மே, 3ம் தேதி 'நீட்' தேர்வு நடக்குமென தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ) கடந்த பிப். 7ல் அறிவித்தது. திருப்பூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர், 400 பேர் உட்பட, ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். வழக்கமாக பள்ளி கல்வித்துறை சார்பில், 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படும்.
மருத்துவர் கனவுடன் 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வுக்கு தயாராகி வரும் அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட கல்வித்துறை நடத்தும் சிறப்பு வகுப்பு பயனுள்ளதாக இருந்தது. பொதுத்தேர்வுக்கு ஒரு மாதம் முன்னரே 'நீட்' அறிவிப்பு வெளியானதால், பலரும் விண்ணப்பித்து விட்டனர். பொதுத்தேர்வு கடந்த மார்ச், 26ம் தேதியுடன் முடிந்தது. தேர்வு முடிந்து ஒரு வாரமாகியுள்ளது. 'நீட்' தேர்வுக்கு (மே 3ம் தேதி) இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், 'நீட்' ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோரிடம் கேட்டதற்கு, சிறப்பு வகுப்பு குறித்த இன்னும் அறிவிப்பு வரவில்லை. 'நீட்' பயிற்சி மையம், தேதி முடிவு செய்த பின் தெரிவிப்பதாக கூறுகின்றனர். இதனால், மாணவர்கள், பெற்றோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
