/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளிகளில் 'நீட்' பயிற்சி; மாணவ, மாணவியர் ஆர்வம்!
/
அரசு பள்ளிகளில் 'நீட்' பயிற்சி; மாணவ, மாணவியர் ஆர்வம்!
அரசு பள்ளிகளில் 'நீட்' பயிற்சி; மாணவ, மாணவியர் ஆர்வம்!
அரசு பள்ளிகளில் 'நீட்' பயிற்சி; மாணவ, மாணவியர் ஆர்வம்!
ADDED : ஏப் 02, 2025 07:52 PM
உடுமலை; திருப்பூர் மாவட்டத்தில் 'நீட் 'தேர்வெழுதி, மருத்துவ படிப்புக்கு நுழைய, அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் மத்தியில் ஆண்டுக்காண்டு ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு, 385 பேர் அரசின் இலவச 'நீட்' பயிற்சி பெற்று வருகின்றனர்.
மருத்துவப்படிப்பில் நுழைய 'நீட்' தேர்வு கட்டாயம் என்ற நிலையில், 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரும் மருத்துவ படிப்பில் நுழைந்து, மருத்துவராக முடியும்.
திருப்பூர் மாவட்ட கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும், 'நீட்' தேர்வில் பங்கேற்க விரும்பும் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, இலவச 'நீட்' பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டுக்கான பயிற்சி திருப்பூர், தாராபுரம், பல்லடம், உடுமலை ஆகிய பகுதிகளிலுள்ள அரசு பள்ளிகளில் வழங்கப்படுகிறது. அந்தந்த பகுதியில் உள்ள மாணவ, மாணவியர், தங்களின் அருகேயுள்ள மையங்களுக்கு சென்று பயிற்சி பெறுகின்றனர்.
ஒவ்வொரு பயிற்சி மையத்திலும், 5 ஆசிரியர் வீதம் பயிற்சி வழங்கி வருகின்றனர். 40 நாட்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
நேற்றுமுன்தினம் துவங்கிய பயிற்சியை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார் துவக்கி வைத்து பேசுகையில், ''மருத்துவராகும் விருப்பத்தில் பயிற்சி வகுப்பில் பங்கேற்றுள்ள மாணவ, மாணவியர், சந்தேகங்களுக்கு இடமின்றி தங்களின் பயிற்சியை முடித்து, சிறப்பாக தேர்வெழுத வேண்டும்,'' என்றார்.
மாநில அளவில் 3ம் இடம்!
திருப்பூர் மாவட்ட 'நீட்' ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் கூறியதாவது:
கடந்த, 6 ஆண்டாக 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறோம். துவக்கத்தில், 118 மாணவ, மாணவியர் பயிற்சி பெற்ற நிலையில், இந்தாண்டு, 385 பேர் பயிற்சி பெற ஆர்வம் காட்டியுள்ளனர். ஆண்டுக்காண்டு 'நீட்' தேர்வெழுதுவதில் மாணவ, மாணவியர் மத்தியில் ஆர்வம் அதிகரித்து வருகிறது.
மாநில அளவில் 'நீட்' தேர்வெழுதுவதில், திருப்பூர் மாவட்டம், 3ம் இடம் பிடித்துள்ளது. ஆண்டுதோறும், தனியார், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் என, 3,000 பேர் வரை தேர்வெழுதுகின்றனர்; இதனால், திருப்பூருக்கு பிரத்யேகமாக தேசிய கல்விக்குழுமம் சார்பில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.