/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மழை நீரை சேகரிப்பதில் அலட்சியம்; நீர்மட்டம் உயர்வதில் சிக்கல்
/
மழை நீரை சேகரிப்பதில் அலட்சியம்; நீர்மட்டம் உயர்வதில் சிக்கல்
மழை நீரை சேகரிப்பதில் அலட்சியம்; நீர்மட்டம் உயர்வதில் சிக்கல்
மழை நீரை சேகரிப்பதில் அலட்சியம்; நீர்மட்டம் உயர்வதில் சிக்கல்
ADDED : டிச 13, 2025 07:49 AM
உடுமலை: மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் காட்சிப்பொருளாக மாறியுள்ளதால், பருவமழை சீசனிலும், மழை நீர் வீணடிக்கப்படுகிறது; குடிமங்கலம் ஒன்றியத்தில், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, மழை நீர் சேகரிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள, ஒன்றியங்களின், நிலத்தடி நீர்மட்டம் குறித்து, குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், சில ஆண்டுகளுக்கு முன், கள ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, குடிமங்கலம், பெதப்பம்பட்டி உட்பட, 21 உள்வட்டங்களில், நிலத்தடி நீர்மட்டம், அபாய நிலையிலுள்ளதாக, தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகள் அடிப்படையில், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, அரசுத்துறைகள் சார்பில், எவ்வித சிறப்பு திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.
மாறாக, குடிமங்கலம் ஒன்றியத்தை, வறட்சி பகுதியாக கணக்கில் எடுத்து, மானிய திட்டங்களில் புறக்கணிக்கும் நிலை காணப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, வடகிழக்கு பருவமழை சீசனில், குடிமங்கலம் ஒன்றிய பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு கிடைத்து வருகிறது. இவ்வாறு, கிடைக்கும் மழை நீரை சேகரித்து, நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த, எவ்வித பணிகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
குறிப்பாக, தமிழக அரசு, வீடுகளிலும், அரசு கட்டடங்களிலும், செயல்படுத்த உத்தரவிட்ட, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள், முறையான பராமரிப்பின்றி காட்சிப்பொருளாக மாறி விட்டது.
மேலும், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், மழை நீர் வடிகால்களின் குறுக்கே, கிராம போர்வெல்கள் அமைந்துள்ள இடத்தில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஊராட்சி நிர்வாகத்தினர், இந்த கட்டமைப்புகளை பெயரளவுக்கு ஏற்படுத்தி, கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர். இதே போல், ஒன்றியத்தின் ஒரே நீராதாரமான, உப்பாறு ஓடை முழுவதும், புதர் மண்டி, ஆக்கிரமிப்புகளால், சுருங்கி பரிதாப நிலையில் உள்ளது.
இவ்வாறு, வறட்சி மிகுந்த பகுதியில், பருவமழை கிடைத்தாலும், அதை திட்டமிட்டு, சேகரிக்க, அலட்சியமாக செயல்படும் அரசுத்துறையினரால், குடிமங்கலம் ஒன்றியம், வறட்சி பட்டியலில், நிரந்தரமாக இடம் பெறும் அபாயமுள்ளது.
எனவே, நடப்பு பருவமழை சீசனிலாவது, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைத்து, ஓடைகளை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக அரசு கட்டடங்களில் மட்டுமாவது, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

