/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அங்கன்வாடி மையங்களை பராமரிப்பதில் அலட்சியம்; சேறும், சகதியுமான வளாகங்களால் வேதனை
/
அங்கன்வாடி மையங்களை பராமரிப்பதில் அலட்சியம்; சேறும், சகதியுமான வளாகங்களால் வேதனை
அங்கன்வாடி மையங்களை பராமரிப்பதில் அலட்சியம்; சேறும், சகதியுமான வளாகங்களால் வேதனை
அங்கன்வாடி மையங்களை பராமரிப்பதில் அலட்சியம்; சேறும், சகதியுமான வளாகங்களால் வேதனை
ADDED : டிச 23, 2024 05:22 AM

உடுமலை : பருவமழை காலத்தில், மழை நீர் தேங்கி, குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருந்தும், அங்கன்வாடி மையங்களில் பராமரிப்பில், உள்ளாட்சி நிர்வாகங்கள் அலட்சியமாக உள்ளன. உதாரணமாக, கணக்கம்பாளையம் ஊராட்சியில், அங்கன்வாடி மையத்துக்கு சேற்றில் தத்தளித்தபடியே செல்லும் அவலம் உள்ளது.
உடுமலை வட்டாரத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், 130க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன.
பருவமழைக்கு பிறகு, பெரும்பாலான மையங்களில், ஈரமான தரைத்தளம், மழை நீர் தேக்கம் உள்ளிட்ட காரணங்களால், குழந்தைகள் பாதிக்கப்பட்டும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
உதாரணமாக, உடுமலை ஒன்றியம்,கணக்கம்பாளையம் ஊராட்சி பத்தாவது வார்டில், அரசு பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் அமைந்துள்ளது.
மையம் அமைந்துள்ள வளாகம் முழுவதும் மண்தளமாக இருப்பதால், மழை பெய்யும் நாட்களில் குழந்தைகள் சென்று வருவதற்கும் முடியாமல், மழைநீர் தேங்கிவிடுகிறது.
சில நாட்களுக்கு முன்,பெய்த மழையால், அங்கன்வாடி மையத்தை சுற்றிலும் மழைநீர் சூழ்ந்தது.
மழைநீரை அப்புறப்படுத்தாமல் விட்டதால், தற்போது பள்ளி நுழைவாயிலிருந்து மையத்துக்கு செல்வதற்கும் முடியாமல், முழுவதும் சேறும் சகதியாக மாறிவிட்டது.
சிறிய கற்களை வழித்தடமாக பதித்து பெற்றோர், குழந்தைகள், பணியாளர்களும் மையத்துக்கு தத்தளித்தபடி செல்கின்றனர்.
குழந்தைகளுக்கு எளிதில் நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இருந்தும், மையத்தை சுற்றியுள்ள மழைநீரை அகற்ற, ஊராட்சி நிர்வாகம் கண்டும் காணாமல் உள்ளது. குழந்தைகள் அவசர தேவைக்கு, கழிப்பறையையும் பயன்படுத்த முடியாமல், மையத்தில் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
இப்பிரச்னையால், இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகளை, மையத்துக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர்.
மழைநீர் தேங்காமல் தடுப்பதற்கும், தளத்தை மேடாக மாற்றுவதற்கும் ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் விட்டதால், தற்போது குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மையத்தை சுற்றி தேங்கும் மழைநீரில் கொசுப்புழுக்களின் உற்பத்தியும் அதிகமாக உள்ளது. மிகுதியான துர்நாற்றம் வீசி, அசுத்தமான சூழலில், குழந்தைகளை பராமரிக்க வேண்டிய நிலை உள்ளது.
பெற்றோர் புகாரையடுத்து,பெயரளவில் மழைநீரை சுற்றி பிளீச்சிங் பவுடர் போட்டு சென்றுள்ளனர்.
பெற்றோர் கூறியதாவது:
மழைநீர் தேக்கம்
செல்வி: 'டெங்கு' காய்ச்சலை தடுக்க வீடுகளை சுற்றிலும் சுத்தமாக வைத்திருக்க மட்டும் அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் இடத்தில், மழைநீர் பல நாட்களாக தேங்கி இருப்பதை, யாரும் கண்டுகொள்ளவில்லை. கொசுத் தொல்லை அதிகரித்து பலரும் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.
பள்ளி வளாகம் முழுவதும் சேறும் சகதியாக இருக்கிறது. சிறிது தடுமாறினாலும் கீழே விழும் ஆபத்தான பாதையாக மாறிவிட்டது. உடனடியாக மழைநீரை அப்புறப்படுத்தி குழந்தைகளுக்கு பாதுகாப்பான வேறு இடத்துக்கு மையத்தை மாற்ற வேண்டும்.
வேறு இடத்துக்கு மாற்றுங்க
தீபா: குழந்தைகள் சிறுநீர் கழிப்பதற்கும் முடியாத நிலையில் கழிப்பறையை சுற்றிலும் மழைநீர்தான் உள்ளது. மழை இடைவெளி விட்டு பலநாட்களாகியும் மையத்துக்கு விடிவு ஏற்படவில்லை.
குழந்தைகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லாமல் நோய் பாதிப்பில் இருக்கின்றனர். மழைநீரை தேங்கவிடாமல் செய்வதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குழந்தைகளின் உடல்நலத்தை பாதுகாப்பதற்கு, எந்த துறையும் முக்கியத்துவம் அளிக்கவில்லை. அங்கன்வாடி மையத்தை பாதுகாப்பான வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு கூறினர்.