தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/அரசு மருத்துவமனைகளில் ஓ.ஆர்.எஸ். கரைசல் அவசியம்

அரசு மருத்துவமனைகளில் ஓ.ஆர்.எஸ். கரைசல் அவசியம்

அரசு மருத்துவமனைகளில் ஓ.ஆர்.எஸ். கரைசல் அவசியம்


UPDATED : மே 02, 2026 05:43 PM

ADDED : மே 02, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 02, 2026 05:43 PM ADDED : மே 02, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தாலுாகா அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பத்துக்கு மேற்பட்ட மாவட்டங்களில், 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகிறது. மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக, வானிலை மையம் தெரிவித்தாலும், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உஷ்ணம் குறைந்தபாடில்லை. குறிப்பாக, காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை உச்சபட்ச வெப்ப பதிவாகிறது.

வெப்ப அலையால் மக்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இணைநோய் உள்ளவர்கள், வயதானவர்களுக்கு 'ஹீட் ஸ்ட்ரோக்' ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது. முன்னெச்சரிக்கையாக, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, காங்கயம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, பல்லடம், தாராபுரம், அவிநாசி, உடுமலை உள்ளிட்ட தாலுகா அரசு மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

மனித உடலின் சராசரி வெப்பநிலை, 98.4 டிகிரி பாரன்ஹீட். புறச் சூழலில் உள்ள வெப்பநிலை அதனை தாண்டி அதிகரிக்கும் போது அந்த வெப்பம் உடலில் கடத்தப்படுகிறது; இதனை உச்சவெப்பநிலை எனக்கூறுகிறோம். அந்த தருணத்தில் உடலானது தன்னைத் தானே குளிர்விக்க பல்வேறு முயற்சியை மேற்கொள்ளும். ஒரு கட்டத்துக்கு மேல் அது பலனளிக்காத பட்சத்தில் மயக்கம், உணர்விழப்பு, வெப்ப வாதம் ஆகியவை ஏற்படும்.

அதிகமாக உடல் சூடாகும் போது அதில் இருந்து தற்காத்துக் கொள்ள ஆவியாதல் எனும் செயல்முறையை உடல் தன்னிச்சையாக மேற்கொள்கிறது. அதாவது, வியர்வை அதிகமாக சுரக்கச் செய்து அதன் வாயிலாக உடலின் வெப்பத்தை தணிக்க முயற்சி நடைபெறும்.அதிக வியர்வை வெளியேறும் போது உடலில் இருந்து குளுக்கோஸ் மற்றும் அத்தியாவசிய உப்புகள் கணிசமாக இழக்க நேரிடும்; நீர்ச்சத்து இழப்பும் ஏற்படும். நீர்ச்சத்து குறைந்தால், செயல்பாடு பாதிக்கும்; வெப்பவாதம் ஏற்படும். எனவே, வெயில் காலத்தில் தண்ணீர் அதிகமாக பருகுவதும், அதனுடன் உப்பு சர்க்கரை கரைசலை (ஓ.ஆர்.எஸ்) பருகுவதும் மிக அவசியம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us