ADDED : பிப் 16, 2024 12:44 AM
திருப்பூர்;திருப்பூரில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகளை விசாரிக்க கூடுதலாக ஒரு புதிய கோர்ட் நாளை திறக்கப்படுகிறது.
திருப்பூர் பகுதியில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு வழக்குகள் அதிகளவில் பதிவாகிறது. இதுபோன்ற வழக்குகள் கூடுதல் மாவட்ட கோர்ட் அளவில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதுபோன்ற வழக்குகள் 8 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்தது.
கடந்த 2019ம் ஆண்டில், இதற்கென சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டது. மாவட்ட நீதிபதி அந்தஸ்திலான நீதிபதி நியமிக்கப்பட்டார். அதன் பின், இது போன்ற வழக்குகளில் விசாரணைகள் வேகப்படுத்தப்பட்டது.
மோட்டர் வாகன விபத்துகளில் பாதிக்கப்படுவோர் இழப்பீடு கேட்டு தொடரும் வழக்குகள்; இழப்பீடு உத்தரவுகள் நிறைவேற்ற கோரும் வழக்குகள் அதிகளவில் விசாரித்து தீர்வு காணப்பட்டது. தற்போது இந்த கோர்ட்டிலும், 5 ஆயிரத்துக்கும் மேல் வழக்குகள் விசாரணையில் உள்ளது. இதன் காரணமாக, கூடுதலாக மற்றொரு கோர்ட் துவங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், மாவட்ட நீதிபதி அந்தஸ்திலான இந்த கோர்ட் துவக்க விழா நாளை (17ம் தேதி) நடக்கிறது. மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், திருப்பூர் மாவட்ட நீதித்துறை பொறுப்பு நீதிபதி மாலா இதை துவக்கி வைக்கிறார். மாவட்ட நீதிபதி சொர்ணம் நடராஜன் உட்பட நீதிபதிகள், அமைச்சர் சாமிநாதன், கலெக்டர், போலீஸ் கமிஷனர், வக்கீல் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.