UPDATED : மே 30, 2026 09:02 PM
ADDED : மே 30, 2026 09:01 PM

திருப்பூர்:மாநகராட்சி நுண் உர உற்பத்தி மையங்களில் புதிய இயந்திரங்கள் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், திடக்கழிவு மேலாண்மை சற்று வேகம் பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில் தினமும், 800 மெட்ரிக் டன் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இதில், காய்கறி உள்ளிட்ட ஈரக்கழிவுகள் தனியாகப் பெறப்பட்டு, நுண் உரம் உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில், மாநகராட்சி பகுதியில் 29 இடங்களில் இந்த உர உற்பத்தி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் கொண்டு வரப்படும் கழிவுகள் கையாளப்பட்டு நுண் உரம் உற்பத்தி செய்து வினியோகிக்கப்படுகிறது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்பட்ட இந்த மையங்களில் சில மையங்கள் முழுமையாகச் செயல்படாமலும், சில மையங்கள் தொடர்ந்து ஓய்வின்றியும் இயங்கி வந்தன. மேலும், இவற்றில் 12 மையங்களில் இயந்திரங்கள் முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறின. இதனால், திடக்கழிவு மேலாண்மையில் தேக்க நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, தலா, 16 லட்சம் ரூபாய் மதிப்பில் 12 இயந்திரங்கள் புதிதாக வாங்க திட்டமிட்டு பணி துவங்கியது.
இதில் தற்போது ஒன்பது இயந்திரங்கள் பெற்று மையங்களில் பொருத்தப்பட்டுள்ளன. புதிதாக பொருத்தப்பட்டுள்ள இயந்திரங்களின் செயல்பாடுகளை மாநகராட்சி கமிஷனர் அமித் ஆய்வு செய்தார். இளம் பொறியாளர் கார்த்திகேயன், சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். மீதமுள்ள மூன்று இயந்திரங்களும் விரைவில் கொண்டு வந்து பயன்பாட்டுக்கு பொருத்தப்படுகிறது. இதனால், திடக்கழிவு மேலாண்மை சற்று வேகம் பிடிக்கும் என தெரிகிறது.
