/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வேளாண்மையில், உற்பத்திக்கு கைகொடுக்கும் கடல்பாசி
/
வேளாண்மையில், உற்பத்திக்கு கைகொடுக்கும் கடல்பாசி
ADDED : அக் 05, 2015 12:40 AM
உடுமலை: 'இயற்கை வேளாண்மையில் குறைந்த செலவில் பயன்படுத்தக்கூடிய பாசி வகைகளால், உற்பத்தித்திறன் பல மடங்கு அதிகரிக்கும்' என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது.
தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது: பாசி வகைகள் இயற்கையில் கிடைப்பவை. இவற்றை எளிதாக சேகரித்து, உலர்த்தி, பொடி செய்து, கொதிக்க வைத்த பின்னர் ஆல்கஹாலில் கரைத்து கடல்பாசி உரம் தயாரிக்கலாம். இதில், புரதச்சத்துகள், அமினோ அமிலங்கள், நுண்ணுாட்ட சத்துகள், சர்க்கரை, வைட்டமின் மற்றும் ஆக்சிஜன், ஜிப்பரலின் உள்ளிட்ட பல வினை ஊக்கிகள் இருப்பதால் தாவர வளர்ச்சியும், அதிக மகசூலும் எளிதில் பெற இயலும்.
ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை தவிர்ப்பதே இயற்கை விவசாயத்தின் நோக்கமாகும். பாசி வகைகளை உரமாக்கும் முயற்சியை, இறவை, மானாவாரி, மலைப்பகுதி, பாதிக்கப்பட்ட நிலப்பகுதிகளில் பின்பற்றலாம். கடல்பாசிகளில் உல்வா, லாக்டுக்கா, டர்பினேரி, கோனாய்டஸ், சர்காசம், பாலிசிஸ்டம் முதன்மையாவை.
கரும்பழுப்பு நிறத்திலுள்ள சர்காசம் பாலிசிஸ்டம் உளுந்து பயிரில், 20 சதவீதம் மகசூலை அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இப்பாசிகள் பசை வடிவிலும், திரவ நிலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. கடல் பாசி விதை நேர்த்தி, நாற்றங்காலில் பயன்பாடு, தெளிப்பு மற்றும் வேர்ப்பகுதி கரைத்து ஊற்றுதல் உள்ளிட்ட முறைகளில் பல பயிர்களுக்கும் தேவைப்படும் அளவிற்கு பயன்படுத்தலாம். காய்கறி, நெல், பருத்தி, பழ வகைகளை விதைக்கும் முன்பு பாசிகளை பயன் படுத்தி நேர்த்தி செய்யலாம்.
கடல்பாசிகளில் உள்ள வினை ஊக்கிகள், விதையை விரைவாக முளைத்திட செய்வதனால், தரமான நாற்றுகள் கிடைக்கின்றன. கடல் பாசியை, 20 லிட்டர் நீரில், 50 கிராம் கலந்து, விதைகளை ஊற வைக்க வேண்டும். நாற்றாங்கால் அமைத்திருந்தால் குறைந்தபட்சம், நான்கு மணிநேரம் இக்கரைசலை தயாரித்து, ஊற்றி நடலாம்.
நடப்பட்ட பயிர்களுக்கு, 15 நாட்களுக்கு பின்னர், 100 லிட்டர் நீரில், ஒரு கிலோ கடல் பாசியை கலந்து தெளிப்பதனால், வளர்ச்சி நன்றாக இருக்கும். 20 நாட்களுக்கு ஒரு முறை இம்முறையை பின்பற்ற வேண்டும். மா, ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளி, தர்பூசணி, கொய்யா, மாதுளை மற்றும் திராட்சை வகைகளை சாகுபடியில், அவற்றை நடவு செய்த, 20ம் நாளில் முதல் முறையாகவும், பூக்கும்போது மொட்டுக்களின் மீதும் தெளிக்க வேண்டும்.
பழமாகும் நாளில் இலைகளின் மீதும் தெளிக்க வேண்டும். 20 நாட்கள் இடைவெளியில் அறுவடை வரை கரைசலை தெளிக்கலாம். தென்னை, பலா, மிளகு, ஏலக்காய் மற்றும் காபி உள்ளிட்ட பயிர்களுக்கு, 3 லிட்டர் நீரில், 50 கிராம் வீதம் கரைத்து அருகில் ஊற்ற வேண்டும்.
தொடர்ந்து பல்வேறு நிலைகளில் பயன்படுத்தினால் பயிர்களின் உற்பத்தித்திறன் அதிகரிக்கும். பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். பூ மொட்டுகள் உதிராமல் முதிர்வதால், அதிக மகசூல் கிடைக்கிறது. மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலைத் துறையை அணுகலாம்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.