ADDED : ஆக 04, 2019 01:04 AM
'ஆடி நோம்பி'னா (ஆடிப்பெருக்கு) அப்படி ஒரு உற்சாகம், கொங்கு மண்டலத்தல் வசிக்கும் குட்டீசுக்கு. காரணம், ஸ்கூல் தொறந்ததும் வர்ற முதல் லீவு, ஆடி நோம்பியாத் தான் இருக்கும்.
துாரியாடறதுக்காக குட்டீசுக்கு மாசக்கணக்கா, மனசு ஏங்கும். இதுக்கு, பெற்றோர்களுக்கு பெரிய செலவெல்லாம் கிடையாது. ஒரு கயிறோ, சேலையோ இருந்தாக்கூட போதும்.வீட்டு விட்டத்திலோ, மரத்திலோ கட்டி விட்டாங்கன்னா துாரி ரெடியாயிடும். அதில் பொழுதுக்கும் ஆடித் திரியறதுன்னா அப்படி ஒரு சுகம்.
'துாரி... துாரி... தும்மக்க துாரி...' ன்னு பாட்டெல்லாம் வேறு. றெக்கை கட்டி பறப்பது போல் இருக்கும்..'அம்மியே பறக்கற மாதிரி அடிக்கிறதுதான ஆடிக்காத்து. அதுல துாரி கட்டி ஆடாட்டி அப்புறம், அந்தக் காத்துக்கு ஒரு மருவாதி இல்லாம போயிருமல்லோ...' என்று அம்மாச்சிகள், பொக்கை வாய் தெரிய கூறுவதுண்டு.குட்டீஸ்னு மட்டுமல்ல. துாரில பெரியவங்களும் சேர்ந்து ஆடுவாங்க... புது மணத்தம்பதினா ஜோடியாவே ஆடுவாங்க... வீட்டுல மகிழ்ச்சி ததும்பும்.
'நமக்கு ஒண்ணு... ஒடம்பொறம்புகளுக்கு ஒண்ணு... ஒரம்பறைகளுக்கு ஒண்ணுனு மொத்தம் மூணு தூரி கட்டுங்கோ.... முரட்டுக்கயிறா வாங்குங்கோ... அப்பத்தான் அந்து போகாது. ஆனா, கயிறு குத்தக்கூடாது. போர்வையை மடிச்சு வச்சாலும் குத்தாது' என்று ஏற்பாடுகள் குறித்து 'அம்மணிகள்' இடும் கட்டளைகள் ஊருக்கே கேட்கும்.
தூரி ஆடிக்கொண்டே முறுக்கு, அதிரசம், பணியாரம்னு ஏகப்பட்ட பலகாரங்களை சுட்டீஸ் தின்னுட்டே இருப்பாங்க... முறுக்கின் 'கறுக், மொறுக்' சத்தத்துடன் துாரியாடும் சத்தமும் சேர்ந்து, ஓரிசையாய் ஒலிச்சுக்கிட்டே இருக்கும்.கோவிலுக்குப் போறது, கலர்கண்ணாடி, பீப்பீ, பலுான் வாங்குறது, பட்டம் வுடுறது, சினிமாக்கு போறதுனு ஆடிப்பெருக்கு கழியறதே தெரியாது.
இத்தனைக்கும் ஊரு ஓடைலயோ, குளத்திலயோ தண்ணீ இருந்ததுனா, முங்கி முங்கி எந்திச்சிட்டுத் தான போவாங்க!நேத்து கூட ஆடி நோம்பிதான். உற்சாகத்தோட தான் மக்கள் கொண்டாடுனாங்க... தூரியாட்டம் கூட இன்னமும் இருக்கு. ரெடிமேடு தூரிகள் கூட வந்திருச்சி... ஆனாலும், என்னமோ ஒண்ணு குறையுது. அந்த பழைய நேசமும், சுவாசமும் மாறிப்போச்சோ... ம்ம்ம்... அப்படித்தான் இருக்கோணும்!