
'நவரசம்' இல்லாமல், மனிதர்கள் இல்லை; பரதத்திலும், 'நவரசம்' காட்டுவதுண்டு; நகைச்சுவை, அழுகை, இளிவரல்(இகழ்ச்சி, அவலம்...), மருட்கை(வியப்பு, குழப்பம்...), அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை, அமைதி ஆகியவற்றை 'நவரசம்' என்று கூறுவதுண்டு; ஒவ்வொரு வார்த்தையும் பல அர்த்தங்கள் அடங்கியதாகவும், பல்வகை உணர்வுகளை வெளிப்படுத்துபவையாகவும் இருக்கின்றன.
சமீபத்தில், 'ஓ.டி.டி.,'யில் வெளியான ஒரு திரைப்படம்கூட, நவரசத்தில் ஒவ்வொன்றையும், கதையாக விரித்து, ரசிகர்களுக்கு சொல்கிறது.நகைச்சுவை----------அன்பா? வம்பா?திருப்பூர் ஸ்ரீ மகாசக்தி அறக்கட்டளை சார்பில், 'கொரோனாவால் குடும்பத்தில் அன்பு வந்ததா; வம்பு வந்ததா?' என்ற பட்டிமன்றம் நடந்தது. போலீஸ் துணை கமிஷனர் ரவி துவக்கிவைத்தார். அறந்தாங்கி நிஷா தலைமையிலான அணியினர், 'அன்பு வந்தது' என்றும், கொங்கு தமிழ் மஞ்சுநாதன் தலைமையிலான அணியினர், 'வம்பு வந்தது' என்றும் வாதிட்டனர். பேராசிரியர் பழனி, 'கொரோனா காலத்தில், குடும்பத்தில், அன்பு வளர்ந்துள்ளது' என, தீர்ப்பு அளித்தார். நகைச்சுவை பட்டிமன்றம் பலரையும் ரசிக்க வைத்தது.கொரோனா காலத்தில் சேவையாற்றிய அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவன தலைவர் பூபதி தலைமை வகித்தார்.-----புட்நோட்ஸ்ரீ மகாசக்தி அறக்கட்டளை சார்பில் கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு போலீஸ் இணை கமிஷனர் ரவி விருது வழங்கினார்.-------------------------அழுகைகிடைக்காத ரேஷன் கார்டுபல்லடம் பகுதி, பொதுமக்கள், ரேஷன் கார்டு கிடைக்கவில்லை என்று கண்ணீர் வடிக்கின்றனர்; அவர்கள் கூறுகையில், ''கடந்த பத்து நாட்களுக்கு மேல் ரேஷன் கார்டுக்காக நடையாய் நடந்து வருகிறோம். ரேஷன் கார்டு கேட்டு வரும்போதெல்லாம், 'கார்டு இன்னும் வரவில்லை; இரண்டு நாள் கழித்து வாருங்கள்' என, பல்வேறு காரணங்கள் கூறி திருப்பி அனுப்புகின்றனர். சாதாரண தொழிலாளியாக வேலை பார்த்து வரும் நாங்கள், விடுப்பு எடுத்து வருவதால், வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ரேஷன் கார்டை வைத்தே இதர ஆவணங்களை பெறவேண்டி உள்ள சூழலில், கார்டுக்காக அலைக்கழிக்கப்படுகிறோம்' என்கின்றனர். தாசில்தார் தேவராஜ் கூறுகையில், 'விண்ணப்பித்தோருக்கு ரேஷன் கார்டு வழங்கப்படும்; ஊரடங்கு வந்தால்கூட, ரேஷன் கடைகள் மூலம் கார்டுகள் வினியோகிக்கப்படும்,' என்றார்.------அவலம்-------வசூல் முறைகேடுபல்லடம்:சுல்தான்பேட்டை ஒன்றிய விவசாயிகள் சிலர் கூறியதாவது:ஒன்றியத்துக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில், வாரச்சந்தை நடந்து வருகிறது. வாரம் ஒருநாள் நடைபெறும் சந்தைக்கு, தினசரி, 50, 100 ரூபாய் என்ற அடிப்படையில், கடைக்கான வரி வசூல் செலுத்தப்படும். ஆனால், கடந்த சில ஆண்டாக,கிராமங்களில் ஏலம் நடத்தப்படவில்லை. வாரச்சந்தையில் கடை அமைக்கும் வியாபாரிகள், விவசாயிகளிடம், 200 முதல் 500 ரூபாய் வரை கடைக்கு ஏற்ப முறைகேடாக வசூலிக்கப்படுகிறது. இதனால், சிறு விற்பனையை நம்பி வரும் விவசாயிகள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஒன்றியம் முழுவதும் உள்ள, வாரச்சந்தை கடைகளுக்கு முறையாக ஏலம் நடத்தப்படவேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் கூறுகின்றனர்.------வியப்பு-------கட்டடம் எதற்கு?அனுப்பர்பாளையம்: திருப்பூர், 15 வேலம்பாளையம் பஸ் ஸ்டாப் அருகில், வருவாய் துறைக்கு சொந்தமான ஆறு சென்ட் இடம் உள்ளது. ஒரு பகுதியில் மின்வாரிய அலுவலகமும், மறு பகுதியில் மருத்துவ வசதியுடன் கூடிய மக்கள் மருந்தகமும் அமைக்க முடிவு செய்து, பொதுமக்களே முன்வந்து, இங்கு 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டடம் கட்டி உள்ளனர். புதிய கட்டடம், அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், இன்னும் மின் வாரிய அலுவலகம் மாற்றப்படவில்லை. இன்னும் மருந்தகத்துக்கு அனுமதி கிடைக்கவில்லை. வியப்பாகத்தானே இருக்கு!-----புட்நோட்: 15 வேலம்பாளையத்தில், மக்களால் கட்டப்பட்ட கட்டடம்------அச்சம்------உயிரின் விலைபல்லடம்:நான்கு சக்கர வாகனங்கள் மீது ஏதேனும் மோதினால், அந்த அதிர்வை உணர்ந்து, இருக்கைகளின் கீழ் உள்ள காற்றுப்பைகள் தானாக விரிவடையும். வாகனங்களின் முன், பின் பம்பர்கள் பொருத்துவதால், விபத்து ஏற்படும் போது அதன் அதிர்வு காற்றுப்பைகளுக்கு சரியாக கிடைப்பதில்லை. வாகனத்தில் உள்ளோர், படுகாயமடைந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு, மத்திய மோட்டார் வாகன சட்டத்தில், நான்கு சக்கர வாகனங்களின் முன், பின் பம்பர்கள் பொருத்த தடை விதிக்கப்பட்டது. ஐகோர்ட் உத்தரவின்படி, கடந்த ஜன., மாதம் தமிழகம் முழுவதும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களிலும், பம்பர்கள் அகற்றும் பணி தீவிரமாக நடந்தது. தற்போது, இந்த விதிமுறை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவை மீறும் வகையில், அரசு அதிகாரிகளும், கட்சியினரும் பம்பர்கள் பொருத்தப்பட்ட கார்களில் வலம் வருகின்றனர்.------பெருமிதம்துாரிகையின் சிறப்புதிருப்பூர்:சிக்கண்ணா அரசு கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பில், காசிகவுண்டன்புதுாரில் உள்ள 'சீடு' நிறுவனத்தின் ஆதரவற்றோர் குழந்தைகள், முதியோர் இல்லத்தில் விழிப்புணர்வு சுவர் ஓவியங்கள் நேற்று வரையப்பட்டன. 'சீடு' நிறுவன இயக்குனர் கலாராணி துவக்கி வைத்தார். மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் மாணவ செயலர்கள் தமிழ்குருமூர்த்தி, ரத்தின கணேஷ், அருள்குமார் தலைமையில், ஓவியங்கள் வரையப்பட்டன. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் ஏற்பாடு செய்திருந்தனர். மாணவரின் சேவை பெருமிதத்துக்குரியது.------புட்நோட்ஆதரவற்றோர் இல்லத்தில், மாணவர்கள் ஓவியம் வரைகின்றனர்.--------வெகுளி-------நிலம் எதற்காக?அவிநாசி: தெக்கலுார் ஊராட்சி, ஏரிப்பாளையத்தில், ஒன்றரை ஏக்கர் நிலத்தில் ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பழத்தோட்டம் அமைத்து, சொட்டு நீர்ப்பாசன கட்டமைப்பும் ஏற்படுத்தப்பட்டு, ஊராட்சி நிர்வாகம் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இடத்தில், ஆதிதிராவிடர்கள், 40 பேருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருக்கிறது. 'அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில், எந்த அடிப்படையில், ஊராட்சி நிர்வாகத்தினர் தோட்டம் அமைத்தனர் என, தெரியவில்லை'' என்கின்றனர் வருவாய்த்துறையினர். ஊராட்சி சிறக்கத்தானே அங்கு தோட்டம் அமைக்கப்பட்டது என்கின்றனர் மக்கள். கள்ளம்கபடம் இல்லா செயல்கள்கூட, சில சமயங்களில், சர்ச்சையாகிவிடுகின்றன.-----உவகை------பொலிவுறும் சந்தைஅவிநாசி:சேவூர் அருகே தத்தனுார் ஊராட்சியில், நுாற்றாண்டு பழமை வாய்ந்த 'புது சந்தை'யில் தற்போது, மாடு, ஆடு ஆகியன விற்கப்படுகின்றன. சந்தையில், 45 லட்சம் ரூபாய் செலவில் கட்டுமானப்பணி நடந்து வருகிறது. ஊர் மக்களே இச்சந்தையை நடத்துகின்றனர்.ஊராட்சி தலைவர் விஜயகுமார் கூறுகையில், ''சந்தையை, புதுபொலிவூட்ட திட்டமிட்டுள்ளோம். நாட்டு மாடு ஏலம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம். மலிவு விலையில், காய்கறி விற்பனையை கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளோம். தத்தனுாரில் கால்நடை மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும்'' என்றனர். 'புதுசந்தை' உவகை கொள்ளலாம்.------புட்நோட்தத்தனுார் ஊராட்சியில் நடைபெறும் மாடு, ஆட்டுச்சந்தை-------------------------------------அமைதி-----திருப்பூர்:ஊரடங்கு காலம், வீட்டிலேயே மக்களை முடங்கச்செய்தது; என்னதான் வீட்டில் முடங்கினாலும், மனமோ முடங்குவதில்லை. பணிக்கு செல்லும் காலத்திலும், மன உளைச்சலால் பலர் பாதிக்கப்படுகின்றனர்.இதற்கெல்லாம் தீர்வு, மனதை அமைதியுறச் செய்வதே. இதற்கான எளிய வழியாக தியானப்பயிற்சி மேற்கொள்வதை, யோகா வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர். திருப்பூரில், பல்வேறு யோகா அமைப்புகள், வீட்டில் இருந்தவாறே, தியானம், யோகா உள்ளிட்ட பயிற்சிகளை பொதுமக்களுக்கு கற்றுக்கொடுத்தன. தற்போது நேரடியாகவும் மக்கள் பயிற்சி எடுத்து வருகின்றனர். தனி நபர் அமைதியுடன் திகழ்ந்தால், குடும்பம் அமைதியுறும்; குடும்பம் அமைதியுற்றால், சமூகமே அமைதியுடன் திகழும்.