/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் மாவட்ட எல்லையில் உஷார்
/
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் மாவட்ட எல்லையில் உஷார்
ADDED : ஜூலை 11, 2025 11:37 PM
உடுமலை, ; கேரளாவில் நிபா வைரஸ் பரவல் துவங்கியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநில எல்லையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கேரள மாநிலம், கோழிக்கோடு மற்றும் பாலக்காடு பகுதிகளில் நிபா வைரஸ் பாதிப்பு தென்பட துவங்கியுள்ளது. 38 வயது பெண்ணுக்கு கண்டறியப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக எச்சரித்த கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள், சிறப்புக்குழு அமைத்து கண்காணிப்பை அம்மாநிலத்தில் முடுக்கி விட்டுள்ளனர்.
அருகில் உள்ள கேரளாவில் இருந்து, தமிழக எல்லையாக உள்ள, திருப்பூர் மாவட்டத்தில், சின்னாறு, ஒன்பதாறு சோதனை சாவடிகள் அமைந்துள்ளன.
இங்கு, பஸ் மற்றும் தனியார் வாகனங்களில், தொடர் காய்ச்சல் பாதிப்புடன் யாராவது கேரளாவில் இருந்து வருகிறார்களா என கண்காணிக்கும் பணி துவங்கியுள்ளது.
கேரளாவில் இருந்து தமிழகம் வருவோர் முகக்கவசம் அணியவும், தனிநபர் இடைவெளி கடைபிடிக்கவும் சுகாதாரக்குழுவால் அறிவுறுத்தப்படுகிறது.
கடுமையான காய்ச்சல், உடல்வலி, தலைவலி, தொண்டை வலி உள்ளிட்ட அறிகுறிகளுடன் வருவோர் உடல் நிலை மருத்துவக்குழு வாயிலாக பரிசோதிக்கப்படுகிறது.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில் அச்சப்படக்கூடிய சூழல் இல்லை. அருகில் உள்ள மாநிலம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ குழு கண்காணிப்பு துவங்கப்பட்டுள்ளது,' என்றனர்.