திருப்பூர்:பின்னலாடை உற்பத்தி அதிநவீன இயந்திரங்களின் அணிவகுப்புடன் திருப்பூரில் துவங்கியுள்ள 'நிட்ஷோ' இன்று மாலை நிறைவு பெறுகிறது.
கடந்த இரண்டு நாளில், கண்காட்சியைப் பார்வையிட்ட தொழில்முனைவோர், கண்காட்சி தொழில்துறைக்கு மிகவும் பயனுள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளனர்.
திருப்பூர், காங்கயம் ரோடு, டாப்லைட் மைதானத்தில் நேற்றுமுன்தினம் 'நிட்ேஷா' கண்காட்சி துவங்கியது. பிரமாண்ட ஐந்து அரங்குகளில், 400 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. பின்னலாடைத் துறையினர் அனைத்துப்பிரிவுகளுக்கும் தேவையான வெளிநாடு மற்றும் உள்நாட்டில் தயாரான அதிநவீனத் தொழில்நுட்பங்கள் மிகுந்த இயந்திரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றின் செயல்விளக்கத்தையும் அறிந்துகொள்ள முடியும்.
கண்காட்சியை பார்வையிட்ட தொழில்துறை அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், 'கண்காட்சியில் இடம்பெற்றுள்ள இயந்திரங்களை பின்னலாடைத் துறை சார்ந்த அனைவரும் காண வேண்டியது அவசியம். இது தொழில்துறை வளர்ச்சிக்குக் கைகொடுக்கும்' என்று கூறினார்.
இரண்டாவது நாளாக நேற்று கண்காட்சி அரங்குகளில் தொழில்முனைவோர் உள்ளிட்ட ஏராளமானோர் குவிந்தனர். இயந்திரங்கள் இயக்கப்படும் விதம், அவற்றில் உள்ள நுட்பங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
கண்காட்சி, இன்று மாலையுடன் நிறைவு பெறுகிறது. கடந்த இரண்டு நாட்களில், 11 ஆயிரம் பேர், கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். இன்று இரவு 7:00 மணியுடன் கண்காட்சி நிறைவு பெறுவதால், அரிய வாய்ப்பை நழுவவிடாமல், கண்காட்சியை பார்வையிட்டு பயன்பெற வேண்டும் என்று கண்காட்சி அமைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
---
தகவல் பரிமாற்றம் எளிது
திருப்பூர், ஆக. 11-
'இ-ஆபீஸ்' திட்டத்தின் வழியே, அரசுத்துறை அலுவலகங்கள் இடையேயான தகவல் பரிவர்த்தனை எளிதாகியுள்ளதாக, மின்னாளுமை திட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
'இ-ஆபீஸ்' நடைமுறை குறித்த பயிற்சி முகாம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. காகித பயன்பாட்டை குறைக்கவும், விரைவான தகவல் தொடர்பை ஊக்குவிக்கவும், மத்திய அரசு, 'இ-ஆபீஸ்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
அரசுத்துறை அலுவலகங்கள் தேர்வு செய்யப்பட்டு, காகித பயன்பாடற்ற, 'இ-ஆபீஸ்' என்ற ஆன்லைன் தகவல் பரிமாற்ற பணி நடந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் சப்-கலெக்டர் அலுவலகம் மற்றும் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி ஆகிய ஐந்து தாலுகாக்களில், 'இ-ஆபீஸ்' திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு பின், வருவாய்த்துறையில் பரவலாக இடமாறுதல் வழங்கப்பட்டது. துணை தாசில்தார், முதுநிலை வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதன்காரணமாக, 'இ-ஆபீஸ்' நடைமுறைகள் குறித்த பயிற்சி முகாம் நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
மின்னாளுமை திட்ட முகமை மாவட்ட மேலாளர் முத்துக்குமார், 'பவர்பாயின்ட்' வாயிலாக, 'இ-ஆபீஸ்' நடைமுறைகளை விளக்கி பேசியதாவது:
'இ-ஆபீஸ்' பக்கத்தை பயன்படுத்தி, ஆன்லைன் வாயிலாக விரைவாக தகவல்களை பரிவர்த்தனை செய்யலாம். ஒவ்வொரு அரசுத்துறை மற்றும் பிரிவுகள் வாரியாக, பிரித்து கடிதங்களை அனுப்பலாம். கோப்புகளுக்கு, ஆங்கிலத்தில் மட்டுமே பெயரிட வேண்டும். குறிப்பு பகுதியில், தமிழில், நான்கு வரிகளில் கோப்பு தொடர்பான விவரத்தை பதிவு செய்து வைத்தால், தேடி எடுக்க எளிதாக இருக்கும். அவசரமாக தேடி எடுக்க வசதியாக, ஒவ்வொரு கோப்புகளுக்கு, தனித்தனியே எண் வரிசையிட்டு பராமரிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-----
ஆஸி.,யில் சர்வதேச ஜவுளி கண்காட்சி
திருப்பூர், ஆக. 11-
ஆஸ்திரேலியாவில், வரும் நவ., 19ல் துவங்கி, 21ம் தேதி வரை நடக்கும், சர்வதேச ஜவுளி கண்காட்சியில் பங்கேற்று பயன்பெறலாம் என, ஏ.இ.பி.சி., அழைப்பு விடுத்துள்ளது.
உலகளாவிலய ஜவுளி உற்பத்தியாளர், வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக முகமைகள் பங்கேற்கும், கண்காட்சி, ஒவ்வொரு நாட்டிலும் நடத்தப்படுகிறது.
ஒரே இடத்தில் அனைவரும் கூடி, கண்காட்சியை பார்வையிட்டு, வர்த்தக வளர்ச்சிக்கான விசாரித்து, ஆர்டர் பெறுவதற்கு வாய்ப்பாக அமைகிறது.
ஆஸ்திரேலியாவின், மெல்பேர்ன் நகரில் உள்ள வர்த்தக மையத்தில், வரும் நவ., 19ல் துவங்கி, 21ம் தேதி வரை, சர்வதேச ஜவுளி கண்காட்சி நடக்கிறது. மத்திய அரசின், மானிய உதவியுடன் பங்கேற்று பயன்பெறுமாறு, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,), ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் வளர்ச்சி
ஆஸ்திரேலியாவில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆயத்த ஆடைகள் தேவை அதிகரித்துள்ளது; நடப்பு ஆண்டில் அந்நட்டின் ஜவுளி இறக்குமதி ஒரு லட்சத்து, 82 ஆயிரத்து, 448 கோடி ரூபாயாக உயருமென, கணிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் ஆர்டருக்கு வாய்ப்பு
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே, வரியில்லா வர்த்தக ஒப் பந்தம் இருப்பதால், நம் நாட்டுக்கு கூடுதல் வர்த்தக வாய்ப்பு கிடைக்கவும் வாய்ப் புள்ளது. இக்கண்காட்சியில் பங்கேற்பதன் வாயிலாக, பசுமை சார் உற்பத்தி சாதனைகளை எடுத்துரைத்து, திருப்பூருக்கு கூடுதல் ஆர்டர்களை ஈர்க்கலாம் என, ஏற்றுமதியாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
சீனா முதலிடம்
ஆஸ்திரேலியாவின் மொத்த இறக்குமதியில், சீனாவின் பங்களிப்பு, 59 சதவீதம், வங்கதேசத் தின் பங்களிப்பு, 11 சத வீதம், வியட்நாம் பங்களிப்பு, 7 சதவீதமாக உள்ளது. இந்தியா, 4.60 சதவீத பங்களிப்புடன்நான்காவது இடத்தில் இருக்கிறது. வங்கதேசத்தில் நிலவும் உள்நாட்டு குழப்பத்தால், இக்கண்காட்சி வாயிலாக, இந்தியாவுக்கு கூடுதல் வர்த்தக வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக, தொழில்துறையினர் நம்புகின்றனர்.
---
சொம்பு பாத்திரங்களுக்கு குறையாத மவுசு
திருப்பூர்:
திருப்பூர் அடுத்த அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அங்கேரிபாளையம், காளம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 250 பாத்திர உற்பத்திப் பட்டறைகள் உள்ளன.
இங்கு, எவர்சில்வர், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களில் குடம், பானை, பொங்கல் பானை, தட்டு, டேக் ஷா, இட்லி சட்டி, ஆலய மணி, உள்ளிட்ட பல்வேறு பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சொம்பு பாத்திர உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது. சொம்பு பாத்திர உற்பத்தியில் பத்துக்கும் மேற்பட்ட பட்டறைகள் ஈடுபட்டு வருகின்றன.
பலவகை சொம்புபாத்திரங்கள்
பட்டறைதாரர்கள் தாங்கள் ஆர்டர் பெறும் உலோகத்தில் தகடு வாங்கி, இயந்திரத்தின் மூலம் அவற்றின் வகை, லிட்டர் கொள்ளளவு ஆகிய வற்றின் அடிப்படையில் சொம்பு பாத்திரத்தை உற்பத்தி செய்கின்றனர்.
உற்பத்தி செய்யப்பட்ட சொம்பு பாத்திரம் பாலீஷ் செய்யப்பட்டு, பேக்கிங் மூலம் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இங்கு, எவர்சில்வர், பித்தளை, செம்பு ஆகிய உலோகங்களில், சொம்பு, லோட்டா சொம்பு, மோர் சொம்பு, அய்யங்கார் சொம்பு ஆகிய நான்கு வகை சொம்பு பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
2 லிட்டர் கொள்ளளவு வரை சொம்பு
ஒவ்வொரு சொம்பும் 250 மி.லி., முதல், 500, 750 மி.லி., ஒரு லிட்டர், ஒன்றேகால், ஒன்றரை, இரண்டு லிட்டர் வரை கொள்ளளவு கொண்டதாக இருக்கும். இரண்டு லிட்டர் கொள்ளளவு கொண்ட சொம்பு பாத்திரம் கோவில்களில் தீர்த்தம் வழங்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் சொம்பு பாத்திரம் தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
சொம்பு பாத்திரங்களுக்கு என்றும் மவுசு குறைவதில்லை.
----
இறைவன் கரங்களில் நாதஸ்வரம் இல்லை; ஏன்?
திருப்பூர்:
டிஜிட்டல் யுக இரைச்சலில், நாதஸ்வர ஓசை சற்றே குறைந்திருந்தாலும், கோவில்கள், சுப நிகழ்ச்சிகள் வாயிலாக அக்கலை இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது.
திருப்பூர், முத்தணம்பாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில், ஆடி அமாவாசை நாளில், நாதஸ்வரம் குறித்து பலரும் அறிந்திராத தகவல்களை எடுத்துரைத்தார், ஆசிரியை கீதா; அவரது உரை:
சரஸ்வதி கையில் வீணை; சிவன் கையில் உடுக்கை இருக்கிறது. எந்த இறைவன் கையிலும் நாதஸ்வரம் இருக்காது; ஏனெனில், நாதஸ்வரமே இறையாக பார்க்கப்படுகிறது.
முன்புறம் வட்ட வடிவில் இருப்பது அனசு; அதை சூரியவட்டம் என்கிறோம்; அது, சூரியபகவானின் அம்சம். குழாய் போன்ற சாமரத்தின் உள்ளே பிரம்மா வசிக்கிறார். சப்த கன்னியர் அம்சமாக, காற்று இசையாக மாறும் ஏழு துளைகள் இருக்கின்றன; மொத்தம் உள்ள, 12 துளைகளில், ஐந்து துளைகள் மெழுகால் அடைக்கப்பட்டிருக்கும்; புலனடக்கம் என்ற தத்துவம் அங்கே இருக்கிறது.
நாதஸ்வரத்தின் மேற்புரம், தாமிரத்தில் செய்த கெண்டை, சக்தியின் அம்சமாக இருக்கிறது. நாதஸ்வரத்தில் பொருத்தி வாசிக்கும் சிறிய ஊசி போன்றது சிவாளி என்பது சிவபெருமான்; சிவன் ஒலி வடிவமாக வியாபித்திருக்கிறார்.அனைத்து இறைசக்தியும் நாதஸ்வரத்தில் இருப்பதால், இறைவன் கையில், இது இருப்பதில்லை. 'ஜீவன் என்பது உயிர், வளி என்பது காற்று; உயிர் கலந்த காற்றை இசையாக மாற்றுவதையே சிவாலி என்கிறோம். நாபிக்கமலத்தில் இருந்து வரும் நாதஸ்வர ஓசையே இசையாக மெய்சிலிர்க்க வைக்கிறது. பல்வேறு இசைக்கருவிகள் இருந்தாலும், நாதஸ்வரமும், தவிலும் தான், மங்களவாத்தியம் எனப்படுகின்றன.
இவ்வாறு, கீதா பேசினார். அவர் பேசி முடித்ததும், மயிலாடுதுறை மாவட்டம், திருப்பாம்புரம் சகோதரர்கள் குஞ்சிதபாதம், சேஷகோபாலன் ஆகியோர் நாதஸ்வரம் இசைக்க, மன்னார்குடி வாசுதேவன், ராமேஸ்வரம் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தவிலிசைக்க, அந்த மாலைப்பொழுது இன்னிசை மழையால் நனைந்தது.
-----
நேர்மறை எண்ணம்தானே சிறந்தது
''ஸ்கூல்ல படிக்கிறப்போ, 'நீ நல்லா கவிதை எழுதுற; நிறைய புத்தகம் படி'ன்னு என் தமிழ் ஆசிரியை சொன்னாங்க. நிறைய புத்தகங்களை வாசிச்சுக்கிட்டே இருப்பேன். தமிழ்ன்னா எனக்கு கொள்ளை பிரியம்...'' என, எழுத்துலகில் பிரகாசிக்கும் ஆவலில் தன் அனுபவத்தை பகிர்ந்தார், திருப்பூரைச் சேர்ந்த அம்பிகா.
'பச்சைய மலை' என்ற கவிதை புத்தகத்தை எழுதி, வெளியிட்டிருக்கிறார். யதார்த்த வாழ்க்கைச்சூழல் சார்ந்த விஷயங்கள், சமூகத்தின் மீதான கரிசனை, பாராட்டு, கோபம் என அவ்வளவையும் வார்த்தைகளால் வடித்திருக்கிறார். வாசிப்பும், எழுத்தும், இவரது விருப்பமாக இருந்தாலும் ஜோதிடக்கலை தான் இவரது தொழிலாக இருக்கிறது.
''இன்னும் ரெண்டு புத்தகம் எழுதிட்டு இருக்கேன்; சீக்கிரம் வெளிவந்துடும். நான் படிச்சது பார்மஸி; மருந்துக்கடையில வேலை செஞ்சிட்டு இருந்தேன். எனக்கு எண் கணித ஜோதிடம் படிக்கணும்ங்கற ஆசையும் இருந்துச்சு.
கொஞ்சம் கொஞ்சமா படிச்சு, கூட வேலை செய்றவங்களோட ராசியை வைச்சு, அவங்களுக்கு நடந்தது, நடக்கப்போறதை சொல்ல ஆரம்பிச்சேன்; 'நீ நல்லா ஜோதிடம் பார்க்குற; அதுல நிறைய படி'ன்னு சொன்னாங்க. ஜோதிட கலையில் முதுகலை படிப்பு வரை படிச்சிருக்கேன்'' என்றார், தான் ஜோதிடரான நிஜத்தை.
'ஆன்மிகம், இலக்கியம்... எப்படி பொருத்திக் கொள்ள முடிகிறது?' என்ற கேள்விக்கு,
''வேலையே கிடைக்க மாட்டேங்குது என்ற விரக்தியில் ஜோதிடம் பார்க்க நிறைய பேர் வருவர். அவர்களின் ஜாதக அமைப்பை சொல்லி, எனக்கு தெரிந்த யாரிடமாவது கூறி, வேலைவாய்ப்பை பெற்றுத்தர முயற்சி செய்வேன்.
எதிர்மறை எண்ணங்கள் வராமல், நேர் மறையுடன் வாழ்க்கையை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்பது தான் என் எண்ணம். நேர்மறை வாழ்க்கைதானே சிறந்தது? இப்படித்தான், என் தொழிலை அமைத்துக் கொண்டிருக்கிறேன்'' என்கிறார் 'பளிச்'சென்று.
'எண்ணங்களே ஏணிப்படி' என்பது புரிந்தது.
--------
மரங்கள் வெட்டப்பட்டன
திருப்பூர், ஆக. 11-
ராயபுரம், கல்லம்பாளையம் பகுதியில் அனுமதியின்றி மரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. தகவல் அறிந்து விரைந்த வருவாய்த்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி, 37வது வார்டு கல்லம்பாளையத்தில், ஏராளமான மரங்கள் நன்கு வளர்ந்துள்ளன. இங்குள்ள சமுதாயக் கூடம் அருகில், சிலர் ரோட்டோரம் வளர்ந்திருந்த சில மரங்கள் வெட்டி அகற்றி, லாரியில் ஏற்றி கொண்டிருந்தனர்.
வடக்கு தாசில்தார் மகேஸ்வரனுக்கு அப்பகுதியினர் தகவல் அளித்தனர். இதனால், வடக்கு வருவாய் ஆய்வாளர் சுப்புராஜ் மற்றும் வருவாய் துறையினர் அப்பகுதிக்கு சென்று, மரங்கள் வெட்டி ஏற்றப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வருவாய் ஆய்வாளர் சுப்புராஜ் கூறுகையில், ''புறம்போக்கு மற்றும் பொது இடத்தில் உள்ள மரங்களை எந்த அனுமதியும் இன்றி வெட்டி அகற்றக் கூடாது. இது குறித்து விசாரணை நடத்தி இதில் ஈடுபட்டோர் மீது போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கப்படும்,'' என்றார்.அப்பகுதியினர் கூறுகையில், 'எங்கள் பகுதியில் மரங்கள் வெட்டி அகற்றும் சம்பவம் தொடர்ந்து நடக்கிறது. வருவாய்துறையினர் இது குறித்து உரிய விசாரணை நடத்தி இதில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
----
ஹாக்கிக்கு முக்கியத்துவம் தராத பள்ளிகள்
திருப்பூர், ஆக. 11-
தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு, திருப்பூர் மாவட்டத்தில், பெரும்பாலான பள்ளிகளில் முக்கியத்துவம் அளிப்பதில்லை.
திருப்பூர் மாவட்டத்தில், 130 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி உள்ள போதும், பத்துக்கும் குறைவான அரசு பள்ளிகளில் மட்டுமே ஹாக்கி அணி உள்ளது. உடுமலை வட்டார பள்ளிகள் தொடர்ந்து, மாநில ஹாக்கி போட்டி வரை முன்னேறி, பாராட்டு பெறுகின்றன. இன்னமும், 80 சதவீத பள்ளிகள் ஹாக்கி அணியை உருவாக்க முனைப்பு காட்டுவதில்லை.
எளிய விளையாட்டுதான்
உடற்கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:ஹாக்கி போட்டிக்கு வந்தால், காயம் பட்டு விடும் என பலரும், குறிப்பாக பெற்றோர் பயப்படுகின்றனர். ஆனால், நுணுக்கம் தெரிந்தால் எளிமையான விளையாட்டு தான். பலரும் 'ரிஸ்க்' எடுக்க விரும்புவதில்லை. 11 பேர் கொண்ட ஒரு மெயின் அணி உருவாக்குவதே சிரமமாக உள்ளது. அதிலும், பத்து, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர் என்றால், பொதுத்தேர்வை ஒதுக்கி வைத்து விட்டு, மைதானத்துக்கு வருவது குறைவாக உள்ளது'' என்றார்.
'ஸ்பான்சர்' தேவை
தரமான ஹாக்கி 'ஸ்டிக்' ஒன்றின் விலை, 9 ஆயிரம் முதல், 11 ஆயிரம் ரூபாய். குறைந்தபட்சம் பயிற்சிக்கு என்றால், கூட, 2,500 முதல் 3,000 ரூபாய். ஒவ்வொரு வீரருக்கும் ஒரு தொகை என்றாலும், அணியை உருவாக்க, 25 ஆயிரம், சீருடைக்கு சேர்த்து, 30 ஆயிரம் முதல், 40 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டும். விளையாட்டுக்காக அரசு மூலம் வழங்கப்படும் நிதி போதுமானதாக இல்லாததால், குறிப்பிட்ட சில, விரல்விட்டு எண்ணும் வகையிலான பள்ளிகள் மட்டும் ஹாக்கி அணியை உருவாக்குகின்றன. தேவையான உபகரணங்களை 'ஸ்பான்சர்' மூலமே பெற வேண்டியுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.
''ஒலிம்பிக்கில் தொடர்ந்து ஹாக்கியில் தங்கம் வென்று இந்தியா சாதித்தது ஒரு காலம். மீண்டும் தற்போதுதான் புத்துயிர் பெற்று வருகிறது. ஒலிம்பிக்கில் இந்தமுறை நம் அணி, வெண்கலம் வென்றுள்ளது. பள்ளி, கல்லுாரிகள் அளவில் ஹாக்கிக்கு முக்கியத்துவம் அளித்தால், ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வது உறுதி'' என்கின்றனர் ஹாக்கி ஆர்வலர்கள்.
மைதான வசதி இல்லை
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை சிக்கண்ணா கல்லுாரியில் மட்டுமே ஹாக்கி விளையாடுவதற்கான மைதானம், இடவசதி உள்ளது. புதிதாக துவங்கப்பட்ட அவிநாசி, பல்லடம், தாராபுரம் அரசு கலைக்கல்லுாரிகளில் போதிய மைதான வசதி இல்லை. 40 ஏக்கர் இடமிருந்தால் கல்லுாரி அனுமதி கொடுத்த நிலை மாறி, நான்கு முதல் ஆறு ஏக்கர் இருந்தாலும், அனுமதி கொடுப்பதால், படிக்க மட்டும் வகுப்பறை, கட்டடம் இருந்தால் போது என்ற நிலை உள்ளது. மைதான வசதி இல்லாததால் கல்லுாரி அளவில் ஹாக்கி அணி உருவாவது எட்டாக்கனியாகவே உள்ளது.
தற்போதைய நிதி ஒதுக்கீட்டு நிலையில், ஒவ்வொரு பள்ளியிலும் ஹாக்கி புல்வெளி மைதானம் உருவாக்குவது சாத்தியமற்றது. அதேநேரம், மாவட்டத்துக்கென ஒரு இடத்தில் ஹாக்கி மைதானம் உருவாக்கலாம்.
மாவட்ட ஹாக்கி சங்கம், ஹாக்கி ஆர்வலர்கள், பொது நல அமைப்புகள் மூலம் பள்ளி, கல்லுாரிகளில் ஹாக்கி போட்டியில் ஆர்வமுள்ள வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்து, சிறப்பாக பயிற்சி வழங்கி, திருப்பூர் மாவட்ட அணியை உருவாக்கலாம். இதன் வாயிலாக, ஜூனியர், சப்- ஜூனியர், சீனியர் மாவட்ட அணி ஒவ்வொரு ஆண்டும் உருவாகும்.
----
கூலி ஒப்பந்த பேச்சுவார்த்தை
விசைத்தறியாளர் அதிருப்தி
பல்லடம், ஆக. 11--
மூன்று ஆண்டுக்கு ஒரு முறை, ஜவுளி உற்பத்தியாளருடன், கூலி உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும். கடந்த, 2014ம் ஆண்டு உயர்த்தப்பட்ட கூலியில் இருந்து, 15 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என, கடந்த ஆண்டு நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது.
இடை ஏற்றுக்கொண்ட பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள், நிர்ணயிக்கப்பட்ட கூலியை வழங்கி வந்தனர். கடந்த சில மாதங்களாக மீண்டும் கூலியை குறைத்து வழங்கி வருவதாக , விசைத்தறி உரிமையாளர்கள் புகார் அளித்திருந்தனர். இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
தொழிலாளர் நலத்துறை ஆணையர் தலைமையில், நேற்று முன்தினம், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், ஜவுளி உற்பத்தியாளர் ஒருவர் மட்டுமே வந்திருந்ததால், குறிப்பிடப்படாமல் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல், சோமனுாரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள், புதிய கூலி உயர்வை வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான பேச்சுவார்த்தைக்கும் நேற்று முன்தினம் திருப்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதில், விசைத்தறி சங்க நிர்வாகிகள் வந்திருந்த நிலையில், ஜவுளி உற்பத்தியாளர்கள் யாருமே பங்கேற்கவில்லை.
விசைத்தறி சங்க நிர்வாகிகள் கூறுகையில், ''ஒவ்வொரு முறை கூலி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கும் போதும், ஜவுளி உற்பத்தியாளர்கள் அதனை நிராகரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், முறையாக கிடைக்க வேண்டிய கூலி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அடுத்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் ஜவுளி உற்பத்தியாளர்களை கட்டாயம் பங்கேற்க செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
-----
இயற்கையிடம் கற்போமா பாடம்?
கடவுளின் தேசத்தில், 'மேக வெடிப்பு' என்ற இயற்கையின் பெரும் சீற்றத்தால், உருக்குலைந்து போனது வயநாடு; இத்தகைய பேரழிவுகள், புத்தகங்களின் பக்கங்களை நிரப்பிடாத பல பாடங்களை கற்பித்துச் சென்றிருக்கிறது.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ கூறியதாவது:
மலை மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் மழைநீர் தான், வெள்ளமாக ஆறு, ஓடைகளில் பெருக்கெடுத்து, திருப்பூர் போன்ற சமவெளிகளில் உள்ள அணைகளில் நிரம்பி ததும்புகிறது; இயற்கையின் பெரும் சீற்றத்தால் வெள்ளத்தின் வேகம் அசுரத்தனமாகி, அணைகள் உடையும் அளவுக்கு மோதினால் நிலைமை என்னவாகும்?
மூன்றையும், நான்கையும் கூட்டினால் ஏழு வரும். இது நேர்க்கோட்டு கணித விதி. இதையே 'ஐந்தை விட அதிகம், 10ஐ விட குறைவு' எனக் கூறினால், அது, குழப்ப விதி. இயற்கையின் விதி, இப்படியாகத்தான் இருக்கிறது. வயநாடு பேரழிவு, பல படிப்பினைகளை கற்றுத்தந்திருக்கிறது. 'மேக வெடிப்பு' என்ற நிகழ்வு, இமயமலை, மேற்குத்தொடர்ச்சி மலை, வட கிழக்குப் பகுதிகளில் உள்ள மலைகளில், வழக்கமாக நிகழும் ஒன்று தான்.
இந்த பூமியில் இதுபோன்ற புயல், வறட்சி, பெருமழை போன்ற காலநிலை மாற்றங்கள் தான் இனி நிகழும் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதற்கேற்ப, நம் வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். செயற்கைக்கோள் வானியல் ஆய்வு மையத்தால், பெரிய புயல் சின்னங்களை கண்டறிய முடியும். ஆனால், அதில் உள்ள ரேடார் கருவிகளால், சிறிய மேகக்கூட்டங்களை துல்லியமாக கணிக்க முடியாது. அதனால், எப்போது மேக வெடிப்பு ஏற்படும் என்பதை அறிவியலால் கூற முடியாது.
கடந்த, 150 ஆண்டுகளில், புவியின் வெப்பம், 1.14 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளது. இந்த புவி வெப்பநிலை, 1.5 டிகிரி உயரும் போது, காலநிலை மாற்றத்தின் கோர முகத்தை நம்மால் காண முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இருள் மீது கோபம் எதற்கு?
விளக்கேற்றுவதே சிறந்தது
''பேரிடர் சம்பவங்களையும், தரவுகளையும் அச்சுறுத்தலாக எடுத்துக்கொள்ளாது, முன்னெச்சரிக்கை என்றெண்ணிச் செயல்படுவதே சாலச்சிறந்தது. பேரிடர் மேலாண்மை குறித்த அறிவு, மாணவர்கள், பொதுமக்களிடம் ஏற்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பேரிடர் மேலாண்மை குழுக்களை அமைத்து, அவசர காலங்களில் மக்களை தற்காத்துக் கொள்வது குறித்த பயிற்சியை வழங்க வேண்டும். இயற்கையின் தன்மை கெடாத வகையிலான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். இருட்டை சபிப்பதை விட விளக்கேற்றி வைப்பதுதானே சிறந்தது?'' என்று கூறுகிறார், ராஜூ.
---
உயர்கல்வி வழிகாட்டி முகாம்
திருப்பூர், ஆக. 11-
திருப்பூர் மாவட்டத்தில், கடந்த 2023 - 24ம் கல்வியாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி அடைந்த அனைத்து மாணவ, மாணவியரும் உயர்கல்விக்கு செல்வதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
கல்லுாரிக்கு விண்ணப்பிக்காத மற்றும் பெற்றோர் இல்லாத மாணவர்கள், கல்வி கட்டணம் செலுத்த இயலாத நிலையில் உள்ள மாணவர்களின் உயர் கல்விக்கு வழிகாட்டுவதற்காக, கலெக்டர் அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதுவரை மூன்று கட்டங்களாக ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.
நான்காம் கட்ட உயர்கல்வி வழிகாட்டி ஆலோசனை முகாம், வரும் 12 மற்றும் 13ம் தேதிகளில் கலெக்டர் அலுவலக அறை எண்: 705ல் நடைபெற உள்ளது. கல்லுாரியில் இடம் கிடைக்காத மாணவ, மாணவியர், முகாமில் பங்கேற்று, உயர்கல்வியில் இணையலாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
---
ஒலிம்பிக்கில் மீண்டும் தங்கம் வெல்வோம்
-ஹாக்கி ஆர்வலர்கள் நம்பிக்கை
நுாலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டாலும், ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றுள்ள, இந்திய ஹாக்கி அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஒரு காலத்தில் தேசிய விளையாட்டான ஹாக்கியில் தொடர்ந்து தங்கப்பதக்கமாக குவித்துவந்த இந்திய அணி, காலவோட்டத்தில், நிலைகுலைந்து, தற்போது மீண்டும் பிரகாசிக்கத் துவங்கியிருக்கிறது. இது, ஹாக்கி ஆர்வலர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வோம் என்ற எண்ணம் மேலோங்குகிறது.
எடுபடாத தடுப்பு ஆட்டம்
அரையிறுதியில், ஜெர்மனியுடனான போட்டியில் இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் இல்லை. துவக்கத்தில் சிறப்பாக திறமை காட்டிய நம் அணியினர், இறுதியில் தவறுகள் செய்து விடுகின்றனர். முதல் பத்து நிமிடம் நம்மிடம் இருந்த ஆட்டம், பின் கைநழுவியது. ஹர்மன்பீரித்சிங் ஆட்டத்தை கணித்து, எதிரணி விளையாடியது; நம் தடுப்பு ஆட்டம் எடுபடவில்லை.
'பெனால்டி கார்னர்' வாய்ப்பை அம்ரித் ரோஹிதாசுக்கு வழங்கி அவர் பயன்படுத்தியிருந்தால், கூடுதலாக ஒரு கோல் அடித்திருக்க முடியும். இந்திய அணிக்கு, இன்னமும் கூடுதலாக வீரர்களை உருவாக்க, நாடு முழுதும், செயற்கை புல் தரை ஹாக்கி மைதானம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது, தமிழகத்தில் தொடர வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- டாக்டர் செந்தில்குமரவேல்,
உடற்கல்வி ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி பெதப்பம்பட்டி.
'பினிஷிங்' ரொம்ப முக்கியம்
அரையிறுதியில் ஜெர்மனியுடனான போட்டியில், ஏழு 'பெனால்டி கார்னர்' வாங்கினோம். சரியாக பயன்படுத்தியிருந்தால், எளிதில் வெற்றி கிடைத்திருக்கும். கிடைத்த இரண்டு பெனால்டி கார்னரையும் கோலாக ஜெர்மனி வீரர்கள் மாற்றினர். நம் அணியிடம் பினிஷிங் சரியாக இருக்க வேண்டும். ஏனெனில், சரியான தருணத்தில் 'பெனால்டி கார்னர்', 'ட்ரக் பிளிக்' செய்வது அவசியம்.
கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தான் இதில் ஸ்பெஷலிஸ்ட். அவரை தவிர, யாரும் இல்லாததால், தடுமாற்றம் ஏற்பட்டது. இருப்பினும், இந்திய அணி ஒலிம்பிக்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது; பெருமையாக உள்ளது. ஒவ்வொரு வீரரின் கடுமையான உழைப்பு தான் இதற்கு காரணம்.
'ஹாக்கி இந்தியா' சங்கம், அதற்கு தகுந்த உற்சாகத்தை தந்துள்ளது. இந்த வெற்றி, வரும் நாட்களில் ஹாக்கி போட்டி வளர்ச்சி பெறும். அசத்தலாக விளையாடிய, கோல்கீப்பர் ஸ்ரீ ஜேஷ் தமிழகத்தில் பயிற்சி பெற்றவர். ஐ.ஓ.பி., வங்கி அணி வீரர்.
- மோகன், செயலாளர், மாவட்ட ஹாக்கி சங்கம், தமிழக ஹாக்கி அணி முன்னாள் வீரர்.
தங்கம் வாங்கியது போன்ற உணர்வு
ஒலிம்பிக்கில், 1980ல் 'ஸ்டிக் ஒர்க்' அதிகமாக இருந்த போது, நாம் 'டாப'பில் இருந்தோம்; தங்கம் குவித்தோம். 'கிராஸ்', 'ஆப்சைடு' விதிமுறைகள் மாற்றப்பட்டது. ஜரோப்பியர்கள் அதிக உயரம் உள்ளவர்களாக உள்ளனர். போட்டி, ஓட்ட நேரம் வேகமெடுத்துள்ளதால், போட்டியில் ஓட்டமும் அதிகமாகி விட்டது. அவர்களால், எளிதில் ஓட முடிகிறது. நம்மவர்கள் உயரமாக இருந்த போதும், ஓட்டம் வேகமெடுக்காததால், இறுதி வரை போராட வேண்டியுள்ளது.
மாவட்ட அளவில் துவங்கி, அடிப்படை நிலையில் இருந்து திறமையான வீரர்களை உருவாக்க புல்தரை மைதானம் வேண்டும். மண் தளத்தில் விளையாடி விட்டு தேசிய போட்டிக்கு சென்றால் சாதிக்க தடுமாற்றம் தான் ஏற்படும். இந்திய அணி பல சிக்கல்களை கடந்து, வெற்றி பெற்றது, பெருமையாக உள்ளது. தங்கம் வாங்கியதை போல் தான் உணர்கிறேன். அனைத்து மாநிலங்களிலும், பள்ளி அளவிலேயே புல்தளத்தில் விளையாடி பழகினால், ஒலிம்பிக்கில் தங்கம் பெறுவது சாத்தியமே!
- ரமேஷ்பாபு, செயற்குழு உறுப்பினர், மாவட்ட ஹாக்கி சங்கம்.
புல்வெளி மைதானம்
1980களுக்கு பின், 2020ல் பெற்ற வெற்றியை தொடர்ந்து, தங்கம் வாங்கியே தீர வேண்டும் என்ற முயற்சி ஒலிம்பிக் துவக்கத்தில் இருந்தே தீராத பசியாக இருந்தது. நியூசிலாந்து போட்டி துவங்கி, ஆஸி., வரை அடுத்தடுத்து வெற்றி பெற்று, பிரிட்டனுடனான ஆட்டத்தில், அம்ரித் 'ரெட்கார்டு' வாங்கிய போதும், ஒன்பது வீரர்களுடன் வெற்றியை நோக்கி பயணித்தது பெருமை.
நாடு முழுதும் செயற்கை புல்வெளி, ஹாக்கி மைதானம் கொண்டு வந்தால், அதிக திறனை வீரர்கள் பெறுவர். சாதித்தது உணர்ந்தாலும், தவறுகளை திருத்திக் கொள்ளவும் வேண்டும். பலம் வாய்ந்த, ஸ்பெயினுடன் போட்டி போடும் போது, ஆட்டம் முடியும் தருவாயில், 65 சதவீத வெற்றி வாய்ப்பு நமக்கே இருந்தது.
சிறந்த வீரர்களை உருவாக்க எஸ்.டி.ஏ.டி., கல்லுாரி கல்வி இயக்கம், 'ஹாக்கி இந்தியா' தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. ஹாக்கி விளையாட இன்னமும் நிறைய வீரர்கள் வர வேண்டும். ஓய்வு அறிவித்த நிலையில், மிக சிறப்பாக விளையாடினார்,ஸ்ரீஜேஷ். ஹாக்கிக்கு என்று தனி விளையாட்டு விடுதி, கோவில்பட்டியில் உள்ளது. இலவச பயிற்சி வழங்குவதால், கூடுதலாக வீரர்கள் உருவாகின்றனர்.
- ராஜராம், சிக்கண்ணா கல்லுாரிஹாக்கி அணி பயிற்சியாளர்.
வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்
இந்திய ஹாக்கி அணி வெண்கல பதக்கம் வென்றதற்காக அவர்களின் பெரிய அளவில் கடின உழைப்பும், உடல் மன உறுதியும், திட்டமிடுதலும் உள்ளது. அதனால், வெண்கலம் சாத்தியமாகியுள்ளது. ஒட்டு மொத்த அணியையும் பாராட்டி, பெரிய அளவில் வெகுமதி தர வேண்டும்.
கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் தடுப்பு ஆட்டம்; ஹர்மன்பிரீத் அபார கோல்கள் இந்தியா அணியின் வெற்றியை உறுதி செய்தது. பஞ்சாப், அரியானா, ஓடிசா வீரர்கள் அதிகமாக உள்ளனர். இந்திய ஹாக்கி அணியில், தமிழக வீரர்களுக்கு அதிகளவில் வர வேண்டும். அதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
- நித்தியானந்தன், ஹாக்கி ரசிகர் செல்வபுரம், மண்ணரை.
------