ADDED : ஆக 28, 2026 09:24 PM
பல்லடம், ஆக. 29-–
மின்கம்பியை மாற்றி அமைக்க, மின்வாரிய ஊழியர் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும், இதற்கான வீடியோ ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், விவசாயி குற்றம்சாட்டியுள்ளார்.
சுல்தான்பேட்டை ஒன்றியம், வடவேடம்பட்டியை சேர்ந்த விவசாயி அருணாசலம், 52. இவரது வீட்டின் வழியாக சென்ற உயர் அழுத்த மின்கம்பியை மாற்றி அமைக்க, கடந்த ஜூலை 22ல் மின்வாரியத்துக்கு விண்ணப்பித்தார். பணியை செய்த மின்வாரிய ஊழியர் ஒருவர், கூலி தர வேண்டும் எனக் கூறி, 5 ஆயிரம் ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வீடியோ ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அருணாசலம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘‘லஞ்சம் வாங்கும்போது நேரடியாக பிடித்தால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என போலீசார் தெரிவித்தனர். ஆதாரங்களுடன் அளித்த புகார் மீது விசாரணையாவது நடத்த வேண்டும்,’’ என்றார்.
நெகமம் மின்வாரிய செயற்பொறியாளர் அய்யப்பன்ராஜ் கூறுகையில், ‘‘இதுபோன்ற புகார் எதுவும் வரவில்லை; விசாரித்து தெரிவிக்கிறேன்,’’ என்றார்.
–––
படம் வேண்டாம்
