ADDED : ஜூன் 26, 2025 12:07 AM

போதைப்பழக்கம், இளைய தலைமுறையினரை பேதைகளாக மாற்றிவருகிறது; எதிர்காலத்தை தொலைக்கின்றனர்; குடும்பத்தினரையும் நிர்க்கதியாக்குகிறது.
'போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்' என்ற நோக்கில் ஆண்டுதோறும் ஜூன் 26ம் தேதி 'போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம்' கடைபிடிக்கப்படுகிறது. இந்தாண்டு, 'போதை பொருள் சந்தைக்கான சங்கிலியை உடைத்து, பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சிகிச்சை மற்றும் மீட்பு' என்ற கருப்பொருள் முன்வைக்கப்பட்டுள்ளது. உழைப்பாளிகள் நகரான திருப்பூரில் போதைப்பழக்கம் குறைந்தபாடில்லை.
பெற்றோரே 'ரோல் மாடல்'போட்டி நிறைந்த உலகில், வாழ்க்கையில் மித மிஞ்சிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டு, யதார்த்தம் மறந்து, கற்பனை உலகில் மிதக்கும் இளைஞர்கள், அது, பூர்த்தியாகாத போது, விரக்தி மற்றும் நம்பிக்கையின்மையால் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகின்றனர். சமூக ஊடகங்களின் தாக்கம், சினிமாவில் நடிகர்களின் நடிப்பை பின்பற்றுதல், குழந்தைகளுக்கு 'ரோல் மாடல்' ஆக இருக்க வேண்டிய பெற்றோரோ, தங்கள் பிள்ளைகள் முன் போதைப்பொருள் பயன்படுத்துதல் ஆகியன போதைப்பழக்கம் அதிகரிக்க காரணங்களாக அமைகின்றன. போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை, வீடு, பள்ளி, கல்லுாரிகளில் அதிகளவில் ஏற்படுத்த வேண்டும்; போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க அரசும், கொள்கை முடிவெடுத்து சரியான முறையில் அமல்படுத்த வேண்டும்.
- நம்பி, இயக்குனர், சமூக கல்வி மற்றும் முன்னேற்ற மையம்
ஒவ்வொருவருக்கும் பொறுப்பு
கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக, கிராம, நகர்ப்புறங்களில் பட்டி, தொட்டியெங்கும் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும், கல்வி, சுகாதாரம், போதைப்பொருட்கள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வை, அரசு துறைகளுடன் இணைந்து நடத்தி வருகிறோம். 'போதைப்பொருட்கள் ஊடுருவியுள்ளது. பெட்டிக்கடை மற்றும் தனிநபர் மூலம் போதைப்பொருள் விற்பனை மறைமுகமாக நடக்கிறது' என்பதை அறிய முடிகிறது. போதைப் பொருள் விற்போர், கடத்துபவர்களை சட்டப்படி கடுமையாக தண்டிக்க வேண்டும். போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து, பள்ளி, கல்லுாரி மாணவர்களை காக்க வேண்டிய பொறுப்பு, நம் ஒவ்வொருவருக்கும் உண்டு.
- சந்திரா
ஒருங்கிணைப்பாளர், விழுதுகள் அமைப்பு
தீர்வு தரும் 'தோப்புக்கரணம்'
பழங்காலத்தில் நம் முன்னோரின் பழக்கத்தில் இருந்தது, 'தோப்புக்கரணம்' தான். தினமும், 21 முறை சரியான முறையில் தோப்புக்கரணம் செய்வதன் வாயிலாக, உடல், உணர்வு மற்றும் மனம் ஆகியவை சரிவர இயங்கும். இப்பயிற்சியை தொடர்ந்து செய்வதன் வாயிலாக நல்ல எண்ணம் வளரும், தீய எண்ணங்கள் மறையும். தோப்புக்கரணம் என்பது ஆசிரியர்களால் மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையல்ல; மாறாக, மனதை ஒருநிலைப்படுத்தும் பரிசு என்பதை உணர வேண்டும்.நம்மை அறியாமலேயே நம்மை நல்வழிப்படுத்தும். போதைப்பழக்கத்தை வெறுக்கும் மனநிலை கூட வரும். பெற்றோர் தான் நமக்கு உறுதுணை என்ற மனநிலை, மாணவர்கள் மத்தியில் வர வேண்டும்.
- மகேஸ்வரி, பயிற்றுனர்,சூப்பர் ப்ரைன் யோகா.
குடியில் குடிநோய் புகாதிருக்க வேண்டும்
மது நீரின்றி அமையட்டும் புது உலகு
-------------------
- இன்று (26.06.2025), போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் -