/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
12 ஆண்டுகளாக பணி நியமனம் இல்லை ! இடைநிலை ஆசிரியர்கள் வேதனை
/
12 ஆண்டுகளாக பணி நியமனம் இல்லை ! இடைநிலை ஆசிரியர்கள் வேதனை
12 ஆண்டுகளாக பணி நியமனம் இல்லை ! இடைநிலை ஆசிரியர்கள் வேதனை
12 ஆண்டுகளாக பணி நியமனம் இல்லை ! இடைநிலை ஆசிரியர்கள் வேதனை
ADDED : ஜூன் 09, 2025 11:45 PM

திருப்பூர்; நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற, இடைநிலை ஆசிரியர்களை கொண்டு, அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், 'விடியலை தாருங்கள் விடியல் அரசே; தகுதி வாய்ந்த இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்துங்கள்' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு வந்த இடைநிலை ஆசிரியர்கள் கலெக்டரிடம் மனு வழங்கினர்.
ஆசிரியர்கள் கூறியதாவது:
கடந்த 2012ம் ஆண்டுக்கு பின், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே வேலை என, அரசு அறிவித்தது. இதையடுத்து, 2012, 2013, 2017, 2019, மற்றும் 2022 ஆண்டுகளில் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. 2012 தேர்வில் தேர்ச்சி பெற்ற, 10 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டுமே பணி வாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த 2013 முதல் 2022 வரை நடைபெற்ற தகுதித்தேர்வுகளில் இடைநிலை ஆசிரியர்கள் சிறந்த மதிப்பெண் பெற்று, பணி வாய்ப்புக்காக காத்திருந்தோம். ஆனால், ஒரு ஆசிரியர் பணியிடம் கூட நிரப்பப்படவில்லை.
கடந்த 2019ல், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள், மீண்டும் நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் வேலை என அரசு உத்தரவிட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், 'இந்த உத்தரவு சமூக நீதிக்கு எதிரானது; நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனேயே இந்த உத்தரவை ரத்து செய்வோம்' என்றார். ஆனால் இதுவரை நியமனத்தேர்வு உத்தரவு ரத்து செய்யப்படவில்லை.
கடந்த 2024ம் ஆண்டும் நியமனத் தேர்வு நடத்தப்பட்டது. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற, இடைநிலை ஆசிரியர்கள், 25 ஆயிரம் பேர் தேர்வெழுதினோம். இதில், 23 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், 2,768 பேருக்கு மட்டுமே பணி வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த, 12 ஆண்டுகளாக, தமிழக அரசு ஒரு இடைநிலை ஆசிரியர் பணியிடத்தை கூட நிரப்பவில்லை; இதனால், வாழ்வாதாரம் இழந்துள்ளோம். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டு தோறும் அதிகரிக்கிறது. போதுமான ஆசிரியர்கள் இல்லாததால், பள்ளி நிர்வாகமே, மாணவர் சேர்க்கையை மறுக்கிறது.
இதனால், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டிய கட்டாய நிலைக்கு பெற்றோர் தள்ளப்படுகின்றனர். எனவே, நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு, அரசு பள்ளிகளில் முழு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.