குப்பை கொட்டும் விவகாரம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை
குப்பை கொட்டும் விவகாரம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை
UPDATED : செப் 01, 2026 10:09 PM
ADDED : செப் 01, 2026 10:03 PM

திருப்பூர்: ஊத்துக்குளி பகுதியில், மாநகராட்சி குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில், எவ்வித உடன்பாடும் ஏற்படவில்லை.
குப்பை கொட்டும் விவகாரம் குறித்து, கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் அமித் முன்னிலை வகித்தார். ஊத்துக்குளி ஒன்றியம், அ.பெரியபாளையம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.
கோவிந்தம்பாளையம், வெள்ளியம்பாளையம் கிராமங்களில், மாநகராட்சி குப்பை கொட்டப்படுகின்றன. குப்பை, 15 ஆயிரம் டன் கொட்டியதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. போலீசாரை வைத்து மிரட்டினாலும், மக்கள் உணர்வை தெரிவிக்க போராட வேண்டியுள்ளதாக கூறினர்.
மாநகராட்சி குப்பை கொட்ட அனுமதிக்க வேண்டுமென அதிகாரிகள் அனுமதி கேட்டும், மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்; இதனால் எவ்வித உடன்பாடும் இல்லாமல் கூட்டம் முடிவுக்கப்பட்டது.
காலை, 10:00 மணிக்கு சமரச பேச்சுவார்த்தை நடக்குமென அழைப்பு விடுக்கப்பட்டது. மக்களும் வந்திருந்தனர். கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வராததால், கூட்டரங்கில் இருந்து மக்கள் வெளியேறினர். அதன்பின், மதியம், 1:30 மணிக்கு பின்னரே கூட்டம் துவங்கியது. கூட்டத்தில், 'குப்பை கொட்டுவோம்,' என்று அதிகாரிகள் கூறியதால், 'போராட்டம் நடத்துவோம்' என்று கூறி, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலைந்தனர்.
