/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முக்கோணத்தில் குறையாத நெரிசல் 'ரவுண்டானா' தேவை
/
முக்கோணத்தில் குறையாத நெரிசல் 'ரவுண்டானா' தேவை
ADDED : செப் 22, 2024 11:58 PM
உடுமலை : உடுமலை அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகனங்கள் விபத்திற்குள்ளாவதை தடுக்க, 'ரவுண்டனா' அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், முக்கோணம் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில், தேசிய நெடுஞ்சாலையிலிருந்து, ஆனைமலை செல்லும் ரோடு பிரிகிறது.
வாளவாடி, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் உடுமலை மற்றும் பொள்ளாச்சிக்கு செல்ல, தேசிய நெடுஞ்சாலையில் இணைகின்றன.
அப்போது, பொள்ளாச்சி மற்றும் உடுமலை பகுதியிலிருந்து அதிவேகமாக வரும் வாகனங்கள் மோதி விபத்துகள் ஏற்படுகின்றன. இருசக்கர வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முடியாமல், சந்திப்பு பகுதியில், திணறுகின்றன.
உடுமலை பகுதியிலிருந்து இயக்கப்படும் பஸ்கள், முக்கோணம் பஸ் ஸ்டாப்பில், தேசிய நெடுஞ்சாலையில் இடதுபுறத்திலும், பொள்ளாச்சியிலிருந்து வரும் பஸ்கள் வலது புறத்திலும் நிறுத்தப்படுகின்றன.
குறுகலான வளைவு பகுதியில், ரோட்டின் இருபுறங்களிலும் பஸ்கள் நிறுத்தப்படும் போது, அப்பகுதியில், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இவ்வாறு, தேசிய நெடுஞ்சாலையில், பொள்ளாச்சி மற்றும் உடுமலை வரும் வாகனங்களுக்கு முக்கோணம் பகுதி அபாய பகுதியாக மாறியுள்ளது.
ஆனைமலை வழித்தடத்தில் செல்லும் பஸ்களும், அங்கு நிறுத்தப்படும் போது, போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வாக, முக்கோணம் பகுதியில், ரவுண்டனா அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ரவுண்டானா அமைந்தால், ஆனைமலை வழித்தடத்தில் வரும் வாகனங்கள் எளிதாக, தேசிய நெடுஞ்சாலையுடன் இணைய முடியும். மேலும், தேசிய நெடுஞ்சாலையில், அதிவேகமாக வரும் வாகனங்களும், வேகத்தை குறைத்து, விபத்தை குறைக்க ரவுண்டனா உதவும்.
இது குறித்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் சார்பில், அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.