/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை கொட்டக்கூடாது; போராட்டம் நடத்த முடிவு
/
குப்பை கொட்டக்கூடாது; போராட்டம் நடத்த முடிவு
ADDED : ஜூலை 04, 2025 11:12 PM
அனுப்பர்பாளையம்; நெருப்பெரிச்சல் பாறைக்குழியில், குப்பை கொட்டுவதை நிறுத்த வேண்டுமென்பதை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டம் நடத்த பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகள் நெருப்பெரிச்சல் ஜி.என்., கார்டன் பத்திரப்பதிவு அலுவலகம் அருகில் உள்ள தனியார் பாறைக்குழியில் கொட்டப்பட்டு வருகிறது. அவ்வாறு கொட்டப்படும் குப்பையால் துர்நாற்றம் வீசுவதாலும், சுகாதார கேடு ஏற்படுவதாலும் குப்பை கொட்ட கூடாது. என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் கருப்பு கொடியேந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும், மக்கள் எதிர்ப்பையும் மீறி போலீஸ் பாதுகாப்புடன் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில தினங்களுக்கு முன் அனைத்து கட்சியினர் மற்றும் பொது மக்கள் நெருப்பெரிச்சல் மற்றும் ஜி.என்., கார்டன் பகுதியில் கடையடைப்பு நடத்தி நெருப்பெரிச்சல் நால் ரோட்டில் குப்பை கொட்ட வந்த லாரியை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 105 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.
போராட்டத்தின் தொடர்ச்சியாக, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கவுன்சிலர் இந்திராணி, தலைமையில் நேற்று முன்தினம் இரவு ஜி.என்., கார்டனில் நடைபெற்றது. கூட்டத்தில், மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதை நிறுத்த வலியுறுத்தி நாளை (6ம் தேதி) ஞாயிறன்று அப்பகுதியில் உள்ள அனைத்து வீடு மற்றும் கடைகளில் கருப்பு கொடி கட்டுவது, 7ம் தேதி ஜி.என்., கார்டன் பஸ் ஸ்டாப் அருகில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.