/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய பாலம் வேண்டாம்; மங்கலம் மக்கள் எதிர்ப்பு
/
புதிய பாலம் வேண்டாம்; மங்கலம் மக்கள் எதிர்ப்பு
ADDED : ஜன 09, 2024 12:57 AM
திருப்பூர்;மங்கலத்தில், புதிய பாலம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து, வேட்டுவபாளையம், பொங்கேகவுண்டம்புதுார் பகுதி மக்கள், கலெக்டர் குறைகேட்பு கூட்டத்தில், அளித்த மனு விவரம்:
மங்கலம், வேட்டுவபாளையத்தில், நபார்டு திட்டத்தில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில் ரோடு பணி நடக்க உள்ளது. ரேஷன் கடையிலிருந்து, நேரு நகர் வழியாக, பூமலுார் வரை, 1.5 கி.மீ., தார் ரோடு போடப்படுகிறது.
பூமலுார் ஊராட்சி, கம்பரிசி தோட்டம் நீர் வழிப்பாதையில், ஏழு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலம் உள்ளது. போக்கு வரத்துக்கு எந்த இடையூறு இன்றி, மழைக்காலங்களில் தண்ணீர் செல்ல எந்த சிரமமும் இன்றி உள்ளது. நல்ல நிலையில் உள்ள இந்த பாலத்தை இடித்துவிட்டு, தற்போது அதே பகுதியில் புதிய பாலம் கட்டுகின்றனர். நன்றாக உள்ள பாலத்தை இடித்து கட்டுவதால், மக்கள் வரிப்பணம் வீணாகிறது.
மற்றொரு மனு
வேட்டுவபாளையத்தில், 4 ஏக்கர் மந்தை புறம்போக்கு நிலம் உள்ளது. புறம்போக்கு நிலத்தை இரண்டாக பிரிக்கும் வகையில், ஏழு ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட ரோடு சேதமடைந்துள்ளது. தற்போது அப்பகுதியில் புதிய ரோடு பணிகள் நடைபெற உள்ளன. மேற்குப்பகுதியில் ஏற்கனவே பயன்பாட்டிலிருந்த பழைய ரோட்டையே, புதுப்பிக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.
மங்கலம் ஊராட்சி தலைவர் மருதாசலமூர்த்தி கூறியதாவது:
கம்பரிசி தோட்டம் பகுதியில், சிமென்ட் குழாய் பதித்த பாலம் அமைத்து 18 ஆண்டுகளாகிறது. இந்த பாலத்தின் மையப்பகுதியில் ஓட்டை விழுந்து விட்டது. ஒன்றிய பொறியாளர்களின் பரிந்துரைப்படி, சிமென்ட் குழாய் பதித்த பழைய பாலம் அகற்றப்பட்டு, புதிய பாலம் கட்டப்படுகிறது.
வேட்டுவபாளையத்தில் அரசு மந்தை புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ரோடு, மங்கலம் - பூமலுார் ஊராட்சியை இணைக்கும் முக்கியமான கிராம சாலையாக உள்ளது. குடியிருப்புகள், நிறுவனங்களுக்கு செல்லும் முக்கிய வழியாக உள்ளதால், ரோடு புதுப்பிக்கப்படுகிறது
இவ்வாறு, அவர் கூறினார்.