/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இனி, யாருடைய கொடியும் பறக்காது!
/
இனி, யாருடைய கொடியும் பறக்காது!
ADDED : மார் 28, 2025 03:16 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், அரசு துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில், அரசியல் கட்சி, மதம், சாதி அமைப்புகளின் மொத்தம் 3,297 கொடிக்கம்பங்கள் உள்ளன. கோர்ட் உத்தரவுப்படி, இந்த கம்பங்களை ஏப்., 21க்குள் அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி அமைப்புகள் உள்பட இதர அரசு துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில் உள்ள, அரசியல் கட்சி, சாதி, மத அமைப்புகளின் கொடிக்கம்பங்களை, 12 வாரத்துக்குள் அகற்றவேண்டும் என, ஐகோர்ட் மதுரை கிளை, உத்தரவிட்டது.
இதனால், திருப்பூர் மாவட்டத்தில், பொது இடங்களில் உள்ள, அகற்றப்பட வேண்டிய கம்பங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அவ்வகையில், மாவட்டம் முழுவதும், தரையில் நடப்பட்ட கொடிக் கம்பங்கள் - 2,652, பீடத்துடன், 645 கம்பங்கள் என, மொத்தம் 3,297 கொடிக் கம்பங்கள் அகற்றப்பட வேண்டும்.
இவற்றில், அரசியல் கட்சிகளில் கம்பங்கள் மட்டும், 2,859 உள்ளது. மதம் சார்ந்த அமைப்புகளின், 234, சாதிய அமைப்புகளின், 57, இதர அமைப்புகளின், 147 உள்ளன.
பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்றுவது தொடர்பான கூட்டம், கலெக்டர் அலுவலக அரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ் தலைமை வகித்தார். அரசு துறை அலுவலர்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி, சாதி, மதம் சார்ந்த அமைப்பினர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில், அரசு துறைகளுக்கு சொந்தமான பொது இடங்களில், அரசியல் கட்சி, மதம், சாதி அமைப்புகளின், மொத்தம் 3,297 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட வேண்டிய பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஐகோர்ட் உத்தரவின்படி, ஏப்., 21ம் தேதிக்குள், கொடிக்கம்பங்களை அகற்றிவிடவேண்டும்.
அகற்றதாபட்சத்தில், துறை சார்ந்த அதிகாரிகள் கொடிக்கம்பங்களை அகற்றுவர்; அதற்கான செலவை, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி அல்லது அமைப்பினர் செலுத்த வேண்டும்.
அரசியல் கட்சியினரோ, இதர அமைப்பினரோ, கம்பங்களை அகற்றுவதால் மின் கம்பங்கள், கேபிள் கம்பங்கள் உள்பட வேறு ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும் சூழல் ஏற்பட்டால், அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.
பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதவகையில் கம்பங்களை அகற்றவேண்டும்.
அரசுத்துறை அதிகாரிகள், தங்கள் துறை சார்ந்த பொது இடங்களில், அகற்றப்பட்ட கம்பங்கள் குறித்த விவரங்களை தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்துக்கு 'அப்டேட்' செய்யவேண்டும் என, கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.