/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சபரிமலைக்கு சிறப்பு பஸ் இல்லை: பக்தர்கள் ஏமாற்றம்
/
சபரிமலைக்கு சிறப்பு பஸ் இல்லை: பக்தர்கள் ஏமாற்றம்
ADDED : நவ 08, 2025 05:00 AM
திருப்பூர்:சபரிமலை
செல்வதற்கு விரைவு போக்குவரத்து கழகம் (எஸ்.இ.டி.சி.) சிறப்பு
பஸ்களை இயக்காதாதால், திருப்பூர், கோவை மற்றும் ஈரோடு மாவட்ட ஐயப்ப
பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சபரிமலை செல்லும் பயணிகள்
வசதிக்காக விரைவு போக்குவரத்து கழகம் (எஸ்.இ.டி.சி.) இம்மாதம், 16ம்
தேதி முதல் ஜன. 16ம் தேதி வரை சிறப்பு பஸ் இயக்கப்படும் என
அறிவித்துள்ளது. பக்தர்கள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆன்லைனில்
முயன்றால், எஸ்.இ.டி.சி. பஸ்கள், கோயம்பேடு, புதுச்சேரி, கிளாம்பாக்கம்,
திருச்சி, மதுரை, கடலுார் ஆகிய பகுதிகளில் இருந்து பம்பைக்கு
செல்வதாக தகவல் வருகிறது. டிக்கெட் முன்பதிவு மையம் செயல்படும்
இடங்களில் பக்தர்கள் விசாரித்தால், 'ஈரோடு, கோவை, திருப்பூரில்
இருந்தும், இவ்வழியாகவும் பஸ்கள் இல்லை. திண்டுக்கல், மதுரை அல்லது
திருச்சி சென்று அங்கு பஸ் ஏறிக் கொள்ளுங்கள்,' என கூறுகின்றனர்.
ஐயப்ப
பக்தர்கள் சிலர் கூறியதாவது: தமிழக மத்திய மாவட்டத்தில் வசிக்கும்
பக்தர்கள் மதுரை, குமுளி வழியாக அதிகளவில் சபரிமலைக்கு சிறப்பு பஸ்
அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவை, திருப்பூரில் இருந்து சிறப்பு
பஸ் அறிவிக்கவில்லை. இதனால், மதுரை அல்லது போடி, குமுளி சென்று,
சபரிமலை செல்ல வேண்டும். கோவை மற்றும் திருப்பூரில் இருந்து
சபரிமலைக்கு சிறப்பு பஸ் இயக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
எஸ்.இ.டி.சி.
அதிகாரிகள் கூறுகையில், 'கோவையில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்
பஸ் இயக்கப்பட்டது. எதிர்பார்த்த பக்தர்கள் கூட்டம் இல்லாததால்,
நிறுத்தப்பட்டது. தற்போது, ஆன்லைன் அல்லது முன்பதிவு மையம் வாயிலாக
டிக்கெட் முன்பதிவு கண்காணித்து வருகிறோம். முன்பதிவு
அதிகரித்தால், பஸ் இயக்குவது குறித்து ஆலோசித்து
முடிவெடுக்கப்படும்,' என்றனர்.

