/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கிழக்கு புறவழிச்சாலை திட்டம் வேண்டாம்'
/
'கிழக்கு புறவழிச்சாலை திட்டம் வேண்டாம்'
ADDED : ஆக 31, 2025 12:15 AM

பல்லடம் :  ''கோவை கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தால் விளை நிலங்கள் பாதிக்கப்ப டுவதை தடுக்க வேண்டும்'' என, ஏர்முனை இளைஞர் அணியினர் கூறினர்.
இதுதொடர்பாக, பல்லடம் எம்.எல்.ஏ., ஆனந்தனிடம் இதன் நிர்வாகிகள் மனு அளித்தனர். பின், மாநில துணைத்தலைவர் சுரேஷ் கூறியதாவது:
கோவை கிழக்கு புறவழிச்சாலை பணி தொடர்பாக, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு அறிக்கை, விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 82 கி.மீ., நீளமுள்ள இந்த சாலை, எல் அண்ட் டி பைபாஸில் ஆரம்பித்து, சூலுார், பல்லடம், அன்னுார், தாலுகா பகுதிகள் வழியாக கோவை தொண்டாமுத்துார் வரை செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான பாதைகள் விவசாய நிலங்கள் வழியாக ஊடுருவி செல்வதால், 1,500 ஏக்கருக்கு மேல் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. திருச்சி, மதுரையில் இருந்து வருபவர்கள், ஏற்கனவே உள்ள காரணம்பேட்டை - கருமத்தம்பட்டி- - அன்னுார் வழித்தடத்தையும், சென்னை, சேலம் வழியாக வருபவர்கள், அவிநாசி, அன்னுார் வழியாகவும் செல்கின்றனர்.
கோவை நகரப் பகுதிக்குள் செல்லாமல், இதர பகுதிகளுக்குச் செல்ல  பல்வேறு சாலை வசதிகள் ஏற்கனவே உள்ள நிலையில், கிழக்கு புறவழிச்சாலை திட்டத்தால் எந்த பயனும் இல்லை. விவசாய நிலங்களை அழித்து, ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கும், பெரு நிறுவன முதலாளிகளுக்கு மட்டுமே இத்திட்டம் பயன் தரும். உயர்மின் கோபுரம், எரிவாயு குழாய் பதிப்பு என, ஏற்கனவே நிலங்களை இழந்து விட்டோம்.
எஞ்சியுள்ள விளை நிலங்களையும் பறித்துக்கொண்டால் வாழ்வாதாரத்துக்கு நாங்கள் என்ன செய்வது?  ஏற்கனவே உள்ள பழைய சாலைகளை விரிவுபடுத்துவதாலும், நெரிசல் உள்ள பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைப்பதாலும், போக்குவரத்தை கட்டுப்படுத்தலாம்.  விளை நிலங்களை அழிக்காமல், மாற்று வழியை செயல்படுத்த வேண்டும்.
விவசாய நிலங்களை திட்டமிட்டு அழிப்பது, இந்தியாவின் முதுகெலும்பை உடைப்பதற்கு சமம். விவசாயத்தைக் காக்க, மத்திய, மாநில அரசுகள், கோவை கிழக்கு புறவழிச் சாலை திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மனுவை பெற்றுக்கொண்ட எம்.எல்.ஏ., ஆனந்தன், ''இது குறித்த உயரதிகாரிகளுக்கு பரிந்துரைக்கிறேன்,'' என உறுதி கூறினார். கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் உட்பட நிர்வாகிகள், விவசாயிகள் உடன் இருந்தனர்.

