போக்குவரத்து கட்டமைப்புகள் இல்லாமல் திணறல்! மடத்துக்குளத்துக்கு தேவை மாற்றங்கள்
போக்குவரத்து கட்டமைப்புகள் இல்லாமல் திணறல்! மடத்துக்குளத்துக்கு தேவை மாற்றங்கள்
UPDATED : அக் 12, 2026 05:10 PM
ADDED : அக் 12, 2026 04:54 PM

உடுமலை: தாலுகாவாக தரம் உயர்ந்து நீண்ட காலமாகியும், மடத்துக்குளத்தில் போக்குவரத்து கட்டமைப்புகள் எதுவும் மேம்படுத்தப்படவில்லை; நகர வளர்ச்சிக்கேற்ப ரவுண்டானா அமைத்தல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படாமல், போக்குவரத்து நெரிசல் அப்பகுதி சிக்கித்தவிக்கிறது.
கோவை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் அமைந்துள்ளது. கடந்த, 2009ல், திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது, தாலுகாவாக மடத்துக்குளம் தரம் உயர்த்தப்பட்டது.
ஆனால், தாலுகாவின் பிரதான நகராக உள்ள மடத்துக்குளத்தில், அடிப்படை போக்குவரத்து கட்டமைப்பு வசதிகள் கூட மேம்படுத்தப்படாமல் உள்ளது.
நால்ரோட்டில் தவிப்பு
மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் அருகே, கோவை–திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, கணியூர் மற்றும் குமரலிங்கம் இணைப்பு ரோடுகள் சந்திக்கும் நால்ரோடு அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகளவு இருக்கும்.
அதே போல், பிற ரோடுகளில் இருந்து வரும் வாகனங்களும் நால்ரோட்டில் திரும்பும் போது, அதிக நெரிசல் ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்டில் இருந்து வரும் பஸ்களும் நால்ரோட்டில் இணைந்து, கணியூர், உடுமலை வழித்தடங்களுக்கு செல்ல வேண்டும்.
நால்ரோடு பகுதியில் ஆக்கிரமிப்பு மற்றும் சந்திப்பு விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படாமல், காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் நெரிசலில் சிக்கி, நீண்ட நேரம் அணிவகுத்து நிற்கிறது.
சந்திப்பு அருகிலேயே அரசு மருத்துவமனையும் அமைந்துள்ளதால், சில நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்களும் நெரிசலில் சிக்கிக்கொள்கின்றன.
பழநி, திண்டுக்கல், பொள்ளாச்சி, கோவை உள்ளிட்ட தொலைதுார பஸ்கள் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்வதில்லை. நால்ரோடு சந்திப்பு அருகே தேசிய நெடுஞ்சாலையில் இந்த பஸ்கள் நிறுத்தப்படுவதால், அப்பகுதியில் நெரிசல் மேலும் அதிகரிக்கிறது.
உடனடி தேவை
மடத்துக்குளம் நால்ரோட்டில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ரோடு சந்திப்பு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும். ரவுண்டானா அமைத்து நெரிசலை தவிர்க்கலாம்.
இதனால், பஸ் ஸ்டாண்டுக்குள் அனைத்து பஸ்களும் எளிதாக சென்று, மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் இணைய முடியும். அதே போல், தானியங்கி சிக்னல் அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினால், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் நெரிசலில் சிக்குவது தவிர்க்கப்படும்.
தாலுகாவின் பிரதான நகராக உள்ள மடத்துக்குளத்தில், போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்துவதால், சுற்றுப்பகுதி கிராம மக்கள் எளிதாக தாலுகா அலுவலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்ல முடியும்.
அப்பகுதியில் பிற தொழில்களும் வளர்ச்சியடையும் வாய்ப்புள்ளது. போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்த அப்பகுதி மக்கள் பிரதிநிதிகளும் முயற்சிக்க வேண்டும்.
