/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செயல்படாத வெள்ள அபாய எச்சரிக்கை கருவி; பஞ்சலிங்க அருவியில் வீணாகும் அவலம்
/
செயல்படாத வெள்ள அபாய எச்சரிக்கை கருவி; பஞ்சலிங்க அருவியில் வீணாகும் அவலம்
செயல்படாத வெள்ள அபாய எச்சரிக்கை கருவி; பஞ்சலிங்க அருவியில் வீணாகும் அவலம்
செயல்படாத வெள்ள அபாய எச்சரிக்கை கருவி; பஞ்சலிங்க அருவியில் வீணாகும் அவலம்
ADDED : மே 05, 2025 10:39 PM

உடுமலை; உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில், வெள்ள காலங்களில் உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில், நவீன தொழில் நுட்பத்தில் நிறுவப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கருவி, பழுதடைந்துள்ள நிலையில், பல ஆண்டாக வீணாக உள்ளது.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், அமணலிங்கேஸ்வரர் கோவில், மலைமேல், 960 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவி, வண்ண மீன் பூங்கா, திருமூர்த்தி அணை என சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலமாக உள்ளது.
கடந்த, 2008 மே 25ல், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் பெய்த கன மழையால், காட்டாறுகளில் நீர்வரத்து அதிகரித்து, திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், பஞ்சலிங்க அருவியில் குளித்துக்கொண்டிருந்த, 13 பேர் வெள்ள நீரில் அடித்துச்செல்லப்பட்டு பலியானார்கள்.
இதனையடுத்து, தமிழகத்தில் முதல் முறையாக, அருவியில் வெள்ள அபாய எச்சரிக்கை கருவி, கடந்த, 2011ல், மலைப்பகுதிகளில், நீர்வரத்து அதிகரித்தால், தானியங்கி முறையில் அலாரம் எழுப்பும் வகையிலும், மலையடிவாரத்திலுள்ள கோவில் அலுவலகத்திற்கும் தகவல் அளிக்கும் வகையில், மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை, வளம் மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில், முழுவதும் நவீன தொழில் நுட்பத்தில், தானியங்கி முறையில், வெள்ள அபாய எச்சரிக்கை கருவி பொருத்தப்பட்டது.
இக்கருவி, அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை, தானியங்கி முறையில் எச்சரிக்கும் வகையில், சிறப்பு தொழில் நுட்பமும், ஒலி பெருக்கியும் அமைக்கப்பட்டது. மேலும், அருவிக்கு செல்லும் வழியில், பல இடங்களில் ஒலி பெருக்கி அமைக்கப்பட்டது.
மலை மேல், காட்டாறுகளில் நீர்வரத்து அதிகரித்தால், தானியங்கி முறையில் எச்சரிக்கை செய்வதோடு, கட்டுப்பாட்டு மையம், கோவில் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கும்.
மலைமேல், குருமலை, வால்பாறை பகுதிகளிலும் வானிலை அறியும் தொழில் நுட்ப கருவிகள், மழையளவு, வெயில் அளவு என அனைத்தையும், அவ்வப்போது தகவல் கிடைக்கும். மேலும், வனச்சூழல் பாதிக்காத வகையில், சோலார் மின் உற்பத்தி வழியாக, இக்கருவிகள் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இக்கருவி நிறுவப்பட்டு ஒரு சில ஆண்டுகள் இயங்கிய நிலையில், வடிவமைப்பு குறைபாடு, பராமரிப்பு இல்லாதது, தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை கருவியை மேம்படுத்துவது, பஞ்சலிங்க அருவிக்கு செல்லும் வழியில் எச்சரிக்கும் ஒலி பெருக்கிகள் என எந்த மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளவில்லை.
இதனால், பஞ்சலிங்க அருவியில் பொருத்தப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கருவி, பல ஆண்டுகளாக பயன்படாமல்வீணாக உள்ளது.
அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
அருவியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பலர் பலியானதற்கு பின், தற்போது மழை குறித்து குருமலை உள்ளிட்ட மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் தகவல் பெற்று, கண்காணித்து, சுற்றுலா பயணியர் அருவிக்கு அனுமதிக்காமல் உள்ளோம்.
ஏற்கனவே, நிறுவப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கருவி, செயல்படாமல் பல ஆண்டுகளாக உள்ளது. இதனை நிறுவிய மாவட்ட பேரிடர் மேலாண்மை துறை, மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட விஞ்ஞானி ஆகியோருக்கு பல முறை கடிதம் அளித்தும், பேசியும், இதுவரை புதுப்பிக்கப்படாமல் உள்ளது.
வரும் தென்மேற்கு பருவ மழை காலம் துவங்குவதற்குள், வெள்ள அபாய எச்சரிக்கை கருவியை புதுப்பிக்க, மாவட்ட நிர்வாகம் வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு தெரிவித்தனர்.