/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பாத்திர உற்பத்தியாளர்கள் ஏக்கம்
/
பாத்திர உற்பத்தியாளர்கள் ஏக்கம்
ADDED : ஜூலை 04, 2025 11:09 PM

அனுப்பர்பாளையம், 15 வேலம்பாளையம், ஆத்துப்பாளையம், அங்கேரிபாளையம், காளம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 250க்கும் மேற்பட்ட பாத்திர உற்பத்தி பட்டறைகள் உள்ளன. இத்தொழிலை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.
பாத்திரங்கள் தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. பாத்திர உற்பத்தியில் நவீனங்கள் வந்தாலும் இங்கு இத்தொழிலை குடும்ப சகிதமாக இருந்து குடிசை தொழிலாகவே மேற்கொள்கின்றனர். கடும் உடல் உழைப்பு தேவைப்படும் தொழில் என்பதால், இளைஞர்கள் யாரும் தொழிலுக்கு வருவதில்லை. 45 வயதுக்கு மேற்பட்டவர்களே உள்ளனர்.
தற்போது, எலக்ட்ரானிக்ஸ், பீங்கான், பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் வரத்தால், பாத்திர விற்பனை குறைந்து அதன் உற்பத்தியும் மந்த நிலையில் உள்ளது. இதனால் பாத்திர உற்பத்தி என்பது வெகுவாக குறைந்து வருகிறது.
பாத்திர உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
இன்று பாத்திரத்துக்கு மாற்றாக பல்வேறு பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது. உற்பத்தி மூல பொருட்கள் விலை மற்றும் மின் கட்டணம் அதிகமாக இருப்பதால், போட்டி போட முடியவில்லை.
தற்போது பல வகை டிசைன்களில் பாத்திர உற்பத்தி செய்ய இயந்திரங்கள் வந்துள்ளன. இயந்திரங்கள் வாங்க அரசு எங்களுக்கு வங்கி வாயிலாக கடனுதவி பெறநடவடிக்கை எடுக்க வேண்டும்.
தகடு உள்ளிட்ட பாத்திர உற்பத்திக்கு தேவையான மூல பொருட்களை பாத்திர கூட்டுறவு சங்கத்தில் கொள்முதல் செய்து குறைந்த விலையில் பாத்திர பட்டறைக்கு விற்பனை செய்ய வேண்டும். மின் கட்டணத்தில் அரசு சலுகை அளிக்க வேண்டும்.
பாத்திர பயிற்சி பட்டறை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து இயந்திரம் வாங்கி தொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்க வேண்டும். இதனால், இளைஞர்கள் இத்தொழிலுக்கு வர வாய்ப்பு உள்ளது.
தொழிலாளர்களுக்கு அரசு நல வாரிய அட்டை வழங்க வேண்டும். இதனால் தொழிலாளர்கள், பாத்திர பட்டறை வேலைக்கு வர ஆர்வம் காட்டுவர்.