ADDED : ஜன 17, 2026 05:23 AM
பல்லடம்: பல்லடம் அடுத்த கரடிவாவி, மலையம்பாளையம் கிராமப் பகுதிகளில் சிறுத்தை உலா வந்ததாக, கடந்த ஒரு மாதத்துக்கு முன் பொதுமக்கள் சிலர் கூறினர்.
வனத்துறையினர், விலங்கின் காலடித்தடங்களை ஆய்வு செய்ததில், அவை, நாய் மற்றும் மான் ஆகியவற்றின் காலடித்தடங்கள் என்பதை உறுதி செய்தனர்.
இதனையடுத்து, சிறுத்தை பீதி அடங்கியது. நேற்று முன்தினம், கே.அய்யம்பாளையம் - அனுப்பட்டி செல்லும் ரோட்டில், சிறுத்தை சென்றதாக இப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். நேற்று அப்பகுதியில் உள்ள காலடித்தடங்களை ஆய்வு செய்த வனத்துறையினர், சிறுத்தை அல்ல; காட்டுப் பூனை என்று கூறினர்.
வனத்துறையினர் கூறுகையில், ''பொதுமக்கள் அளித்த தகவலின் பெயரில், கே.அய்யம்பாளையம் கிராமத்தில் கள ஆய்வு செய்யப்பட்டது. இதனால், அங்கிருந்த காலடித்தடங்கள் காட்டு பூனையின் காலடி என்பது உறுதியானது. இப்பகுதியில் கோழிப்பண்ணை அதிகம் இருப்பதால், இறந்த கோழிகளை உண்பதற்காக வந்திருக்கலாம். எனவே, சிறுத்தை இருப்பதாக அச்சம் தேவையில்லை,'' என்றனர்.
