கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை... சுத்தமாக இல்லை!சுகாதார சீர்கேடுகளால் தவிக்கும் மக்கள்
கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை... சுத்தமாக இல்லை!சுகாதார சீர்கேடுகளால் தவிக்கும் மக்கள்
UPDATED : ஜூலை 07, 2026 05:36 PM
ADDED : ஜூலை 07, 2026 05:02 PM

உடுமலை: வீடுதோறும் குப்பையை சேகரிக்க போதிய துாய்மைக்காவலர்கள் இல்லாதது, பேட்டரி வாகனங்கள் பழுது, இயற்கை உரக்குடில்கள் முடக்கம், கண்காணிப்பு இல்லாதது என திடக்கழிவு மேலாண்மை திட்டம் முற்றிலுமாக முடங்கி கிராமங்களில், சுகாதார சீர்கேடு நிரந்தரமாகியுள்ளது. ஒன்றிய அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்காததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர். உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில், 72 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த, திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
இத்திட்டத்தில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் மட்கும், மட்காத குப்பையை தனியாக சேகரித்து, அப்புறப்படுத்துவது இல்லை.
பணியாளர் பற்றாக்குறை கிராமங்களில் மக்கள் தொகை பல மடங்கு அதிகரித்துள்ளது. அதற்கேற்ப துாய்மைக்காவலர்கள் நியமிக்கப்படாததால், வீடுகள்தோறும் குப்பை சேகரிப்பது சவாலாக மாறியுள்ளது.
சில கிராமங்களில் இரு வாரங்களுக்கு ஒரு முறை மட்டும், வீடுகளில் குப்பை சேகரிக்கும் முறை உள்ளது. இதனால், வீடுகளில் தேங்கும் கழிவுகளை அருகிலுள்ள திறந்தவெளியில் கொட்டுகின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்தினரும் இந்த கழிவுகளை முறையாக அகற்றாமல், திறந்தவெளியில் தீ வைத்து எரித்து விடுகின்றனர். பல்வேறு பாதிப்புகள் தொடர்கதையாக இருந்தும், கிராம மக்கள் தொகைக்கேற்ப துாய்மைக்காவலர்கள் நியமிக்க அரசு முன்வரவில்லை.
வாகனங்கள் 'அவுட்' துாய்மைக்காவலர்கள் சேகரிக்கும் குப்பையை இயற்கை உரக்குடிலுக்கு கொண்டு செல்ல ஊராட்சிகளுக்கு பல்வேறு நிதி திட்டங்களின் கீழ் பேட்டரி வாகனங்கள் வழங்கப்பட்டன.
பயன்பாட்டுக்கு வந்து சில மாதங்களில் இவ்வண்டிகள் 'மக்கர்' செய்ய துவங்கியதால், ஊராட்சி நிர்வாகத்தினர் வாகனங்கள் பராமரிப்பை கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொரு ஊராட்சியிலும், இவ்வகை வாகனங்கள் காட்சிப்பொருளாக நிறுத்தப்பட்டுள்ளன.
மேலும் குப்பையை நீண்ட துாரம் கொண்டு செல்ல வாகனங்கள் இல்லாததால், ஊராட்சி நிர்வாகத்தினரே ஓரிடத்தில் குப்பையை குவித்து எரித்து விடுகின்றனர்.
உரக்குடில்கள் மாயம் மட்கும், மட்காத குப்பையை தனியாக பிரித்து, மட்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்டது. உரம் தயாரிப்புக்கான தொட்டிகள் கட்டப்பட்டது.
மட்காத பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யலாம் அல்லது, விற்பனை செய்து வருவாயை ஊராட்சி நிர்வாகம் பெற்றுக்கொள்ளலாம் என வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.
ஆனால், உரக்குடில்கள் இருக்கும் இடம் தெரியாத அளவுக்கு, பராமரிப்பு இல்லாமல் பரிதாப நிலைக்கு மாறியுள்ளன. மட்கும், மட்காத குப்பை என அனைத்து வகை கழிவுகளும் நீர்நிலை கரைகளிலும், திறந்தவெளியிலும் கொட்டி விடுகின்றனர்.
இவ்வாறு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் அனைத்து செயல்பாடுகளும் முடங்கி, கிராமங்களில் சுகாதார சீர்கேடு நிரந்தரமாக உள்ளது.
ஒவ்வொரு ஒன்றியங்களிலும், ஊராட்சிகள் மண்டலமாக பிரிக்கப்பட்டு, மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; அவர்களை கண்காணிக்கும் அலுவலர்களும் பணியில் உள்ளனர்.
'இந்த அதிகாரிகள் கிராமங்களுக்கு நேரடியாக வந்தால், அவர்களின் கண்ணில் இத்தகைய அவலங்கள் தென்பட வாய்ப்புள்ளது. அதற்கு பிறகாவது சுகாதார சீர்கேடுகளுக்கு தற்காலிக தீர்வு கிடைக்கும்,' என மக்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.
