ADDED : டிச 14, 2025 07:49 AM
திருப்பூர்: போக்குவரத்து விதிமுறைகளை மீறி, கூடுதல் கட்டணம் வசூலித்ததாக, திருப்பூரில் இயங்கும், 12 மினிபஸ்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சரவணன், ''திருப்பூரில் மினிபஸ்கள் வழித்தடம் மாற்றி இயக்கப்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது; அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என மனு அளித்திருந்தார்.
கலெக்டர் இம்மனு குறித்து விசாரிக்கும் படி, வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மினிபஸ் இயக்கம், கட்டணம் குறித்து சில நாட்களாக, ஆய்வாளர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
திருப்பூர் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் வெங்கிடுசாமி கூறுகையில், ''வழித்தடம் மாற்றி இயக்கப்படும் மினி பஸ்கள், நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக நடத்தப்பட்ட தொடர் ஆய்வில், 12 மினி பஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.

