/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இனி, 3 மணி நேரத்தில் காசோலை 'கிளியரிங்' ; தொழில் துறையினர், வியாபாரிகள் நிம்மதி
/
இனி, 3 மணி நேரத்தில் காசோலை 'கிளியரிங்' ; தொழில் துறையினர், வியாபாரிகள் நிம்மதி
இனி, 3 மணி நேரத்தில் காசோலை 'கிளியரிங்' ; தொழில் துறையினர், வியாபாரிகள் நிம்மதி
இனி, 3 மணி நேரத்தில் காசோலை 'கிளியரிங்' ; தொழில் துறையினர், வியாபாரிகள் நிம்மதி
ADDED : அக் 06, 2025 12:40 AM

திருப்பூர்,; திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர், பண பரிவர்த்தனையில் சந்தித்து வந்த சிரமங்களுக்கு, காசோலையை விரைவாக 'கிளியரிங்' செய்யும் நடைமுறை நிரந்தர தீர்வாக அமைந்துள்ளதாக, தொழில்துறையினர், வர்த்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியால், பண பரிவர்த்தனை 'டிஜிட்டல்' முறைக்குமாறிவிட்டது. வங்கி கணக்கில் உள்ள பணத்தை, யு.பி.ஐ., உட்பட, 'டிஜிட்டல்' முறையில் அனுப்புவது எளிதாகிவிட்டது. இருப்பினும், தொழில் வர்த்தக ரீதியான நடவடிக்கையில்,காசோலை பயன்பாடும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. திருப்பூர் பின்னலாடை தொழிலில், 'நிட்டிங்' துவங்கி 'பேக்கிங்' வரையில், பெரும்பாலான வங்கி நடவடிக்கை, 'டிஜிட்டல்' மயமாகிவிட்டது. இருப்பினும், 25 சதவீதம் பேர்வரை, காசோலை பயன்பாடும் இருக்கத்தான் செய்கிறது.
மத்திய ரிசர்வ் வங்கி நடவடிக்கையால், 'டிபாசிட்' செய்யப்படும் காசோலை, ஒரே நாளில் 'கிளியரிங்' செய்ய வேண்டும். வரும், ஜன., முதல், மூன்று மணி நேரத்தில் 'கிளியரிங்'ஆக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இது, திருப்பூருக்கு பல்வேறு வகையில் பயனளிப்பதாக இருக்கும் என, தொழில்துறையினர், ஆடிட்டர்கள், வியாபாரிகள், வர்த்தகர்கள் கூறுகின்றனர். இருப்பினும், காசோலை தொடர்பான இருதரப்புக்கும் பொறுப்பு கூடியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பணம் ஓரிடத்தில் தேங்காது
தொழில் நடத்தும் அனைவருக்கும், காசோலை மீதான புதிய உத்தரவு பயனளிக்கும்.ஒரே நாளில், காசோலை பணமாகும் போது, ஓரிடத்தில் பணம் தேங்குவது தவிர்க்கப்படும்; அடுத்தகட்ட ஆடை உற்பத்தி பணிகள் விறுவிறுப்பாக நடக்கும். 'ஆன்லைன்' மூலமாக, ஒரு மணி நேரத்தில் 'கிளியரன்ஸ்' ஆகுமென கூறியுள்ளனர். முன்பு, இரண்டு நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது. காசோலை பெறுபவர், தாமதமின்றி, சிலமணி நேரத்தில் பணத்தை, வங்கியில் இருந்து எடுக்க முடியும்.
- திருக்குமரன், பொதுசெயலாளர், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்.
கைமேல் பணம் கிடைத்துவிடும்
ஏற்றுமதி வர்த்தகம் தொடர்பான வங்கி நடவடிக்கைகள் தனி; இருப்பினும், உற்பத்தி நடவடிக்கை தொடர்பான செலவுகளுக்கு, இன்னும் சிலர் காசோலை கொடுக்கின்றனர். 'டிஜிட்டல்' பரிவர்த்தனை அதிக அளவு பின்பற்றப்படுகிறது. இருப்பினும், 'ஜாப் ஒர்க்' கட்டணம் மற்றும் சில வகை சேவைகளுக்கு, காசோலை கொடுக்கிறோம்; இனிமேல் தாமதமின்றி கைக்கு பணம் வந்துவிடும் என்று பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
- லோகநாதன், பின்னலாடை ஏற்றுமதியாளர், திருப்பூர்.
லாரி வாடகை பிரச்னை இருக்காது
கர்நாடகா, ஆந்திரா பகுதிகளில் இருந்து, லாரிகள் மூலமாக நெல் மூட்டைகள் எடுத்துவரப்படுகின்றன. அப்போது, லாரி வாடகையாக மட்டும், 60 ஆயிரம் ரூபாய் வரை கொடுக்க வேண்டியிருக்கிறது. அவர்கள், 'டிஜிட்டல்' பரிவர்த்தனையை ஏற்பதில்லை. டிரைவரிடம், கொஞ்சம்ரொக்கமாவும், மீதி காசோலையாகவும் வழங்குவோம். அவர்கள், அதை பணமாக மாற்ற ஒரு வாரத்துக்கு மேலாகிறது. இனிமேல், காசோலை வழங்கியதும், அதை 'ஸ்கேன்' செய்து வங்கிக்கு அனுப்பினால், சில மணி நேரத்தில் லாரி வாடகை, அவர்களது வங்கி கணக்கிற்கு சென்றுவிடும். நீண்ட நாள் பிரச்னைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.
- துரைசாமி, தலைவர், தாலுகா அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர்.
அனைவருக்கும் சிரமம் குறையும்
மத்திய ரிசர்வ் வங்கி, படிப்படியாக வங்கி சேவையை மேம்படுத்தி வருகிறது. சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரத்தில், 80 சதவீதம் 'நெட் பாங்கிங்' முறையில் பண பரிவர்த்தனை நடக்கிறது. இருப்பினும், சிலர் மட்டும் காசோலை கொடுக்கும் நடைமுறையில் இருக்கின்றனர். காசோலை மூன்று மணி நேரத்துக்குள் செலுத்தப்பட்டு, ரொக்கமாக பெற முடியும் என்றால், அவர்கள் பயன்பெறுவர். . இது, அனைத்து தரப்பினருக்கும் சிரமங்களை குறைந்துள்ளது.
- பாஸ்கரன், சாயம் மற்றும் கெமிக்கல் வியாபாரம், திருப்பூர்.
கடன் வாங்க வேண்டாமே!
காசோலை மீதான நடவடிக்கை விரைவுபடுத்தியது, மிகப்பெரிய பயனளிப்பதாக இருக்கும். நமக்கு வரவேண்டிய பணத்துக்காக, 2, 3 நாட்கள் காத்திருக்கும் போது, முதலீட்டு செலவை செய்ய முடியாத நிலை இருந்தது.விரைவில் ஒரு மணி நேரத்தில் ரொக்கமாக மாற்றி பெறலாம் என்பதால், நாம் கொடுக்க வேண்டியவர்களுக்கும் விரைவாக பணத்தை கொடுக்க முடியும். பனியன் தொழிலில், லட்சக்கணக்கான தொகையை வழங்க, கூடுதல் வட்டி செலுத்த வேண்டிய நிலை இருக்காது. சனிக்கிழமை சம்பளம் வழங்க, காசோலையை நம்ப முடியாமல், வீணாக வெளியே கடன் வாங்க வேண்டிய நிலை இருந்தது; இனி அதுபோன்ற நெருக்கடி இருக்காது. எங்களுக்கு சேர வேண்டிய பணம், விரைவாக கைக்கு வந்து சேரும்.
- சுரேஷ்குமார், உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர், திருப்பூர்.
'செக்' கொடுப்பவர்கள் உஷார்
காசோலை தொடர்பான மாற்றம், பெறுபவருக்கு மட்டுமல்ல, கொடுப்பவருக்கும் கூடுதல் பொறுப்பை உருவாக்கியுள்ளது. வங்கி கணக்கில் அடுத்த நாள் பணம் 'கிரெடிட்' ஆகும் என்ற நம்பிக்கையில், காசோலை கொடுப்பார்கள். இனிமேல் அப்படி செய்ய முடியாது, அவரவர் கணக்கில் போதிய தொகை இருந்தால் மட்டுமே 'செக்' கொடுக்க வேண்டும். 'செக்' வாங்குபவர்களும், அதை விரைவில் பணமாக மாற்ற, அவர்களின் செலவுகளை செய்யலாம். பலரும் 'நெட் பாங்கிங்' முறைக்கு மாறிவிட்டதால், புதிய மாற்றத்தால் அதிக பயனில்லை. இருப்பினும், காசோலை தொடர்பான பரிவர்த்தனையும், 'நெட் பாங்கிங்' போல் விரைவாக நடக்கும்.
- சசிக்குமார், உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர், திருப்பூர்.
வரவு - செலவு சீராக இருக்கும்
'ஜாப் ஒர்க்' நிறுவனங்களுக்கு, பெரும்பாலும் காசோலை கொடுப்பார்கள். இனிமேல், இரண்டு மணி நேரத்துக்குள் காசோலை பணமாகும் என்பது வரவேற்புக்குரியது. இருப்பினும், காசோலை கொடுப்பவர்களும், நிதி கையிருப்பு வைப்பதில் சரியாக இருக்க வேண்டும். இதற்கு பிறகு,வர்த்தகத்தில் இருதரப்பினருக்கும் பயனுள்ளதாக மாறும். மாற்றுத்திற்கு ஏற்ப முழுமையாக நாம் மாறித்தான் ஆக வேண்டும்.
- மாதேஸ்வரன், சாய ஆலை உரிமையாளர், திருப்பூர்.
இனிமேல் தான் கூடுதல் கவனம்
உள்ளூராக இருந்தால் ஓரிரு நாளில் காசோலைகள் வரவு வைக்கப்படும். வெளியூர் காசோலையாக இருந்தால், மேலும் தாமதம் ஏற்படுகிறது. இந்த இடைவெளிக்குள், வங்கியில் உள்ள பணத்தை செலவழித்துவிட்டு, விரைவாக வங்கியில் பணம் செலுத்தும் நடைமுறையும் இருந்தது. வர்த்தகர்கள், ஓரிரு நாட்களுக்கு வெளியே கொடுத்து 'ரொட்டேஷன்' முறையில் செலவழிப்பார்கள். இனி, காசோலையை கொடுத்துவிட்டு, அவ்வாறு வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை செலவழித்தால் ஆபத்துதான். கசோலை திரும்பினால், வழக்கை சந்திக்க நேரிடும்; அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும். புதிய உத்தரவால், காசோலை கொடுப்பவர் கவனமாக இருக்க வேண்டும்.
- வினோத், ஆடிட்டர், திருப்பூர்.
தானிங்கி முறையில் 'கிரெடிட்'
வங்கி நடவடிக்கை பெரும்பாலும் டிஜிட்டலுக்கு மாறிவிட்டது; இருப்பினும், காசோலை பரிவர்த்தனையும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மூன்று நாள் வரை காலதாமதம் ஏற்பட்டது இனி, அதிகபட்சம் மூன்று மணி நேரத்துக்குள் 'கிளியரிங்' செய்யப்படும். காசோடி 'டிபாசிட்' செய்த மூன்று மணி நேரத்துக்குள், வங்கியில் இருந்து 'கிளியரிங்' செய்யலாம். கூடாது என்று தகவல் அனுப்ப வேண்டும். அதனடிப்படையில்தான் பணம் வரவு வைக்கப்படும். வங்கிகள் இரவு, 7:00 மணிக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா என்று கூற வேண்டும். இல்லாதபட்சத்தில், தானாகவே 'கிளியரிங்' செய்து, வாடிக்கையாளர் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும்.
- பூபதிராஜ், ஆடிட்டர், திருப்பூர்.