/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யல் புது ரோடு... இப்பவே கரடுமுரடு!
/
நொய்யல் புது ரோடு... இப்பவே கரடுமுரடு!
ADDED : ஜன 28, 2024 11:48 PM

திருப்பூர்;நொய்யல் கரையோரம் அமைக்கப்படும் தார் ரோடு பணியில், தரத்தை உறுதிசெய்ய வேண்டுமென, பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
திருப்பூர் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மாநகராட்சி எல்லையில், நொய்யல் ஆற்றை சீரமைத்து, புதிய வழித்தடம் அமைக்கப்படுகிறது.
நொய்யல் ஆற்றின் இருபுறமும், புதிய ரோடுகள் அமைத்து, கழிவுகளை ஆற்றில் கொட்டுவதை தடுக்கும் வகையில், கம்பிவேலியும் அமைக்கப்படுகிறது. ராயபுரம் தீபம் பாலத்தில் இருந்து, அணைப்பாளையம் வரை, இருபுறமும் தார்ரோடு அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இருப்பினும், தார்ரோடு பணியில் தரம் இல்லையென, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ரோட்டில் புதிய தார்ரோடு அமைத்துள்ளனர்; அவ்வழியாக, தார் ஜல்லி ஏற்றி வரும் லாரிகள் சென்று வந்ததும், ஜல்லிகள் பெயர்ந்து, ரோட்டில் பரவலாக கிடக்கின்றன. 'டூ வீலரில்' செல்பவர் சறுக்கி விழும் ஆபத்து உள்ளது.
மேலும், தார்ரோடு அமைத்த இடங்களில், ரோட்டை பிளந்து கொண்டு, செடிகள் முளைத்துள்ளன.
திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள், நேரில் ஆய்வு செய்து, நொய்யல் கரையோர தார்ரோடு பணியின் தரத்தை உறுதி செய்ய வேண்டும். அதேபோல், நொய்யல் ரோட்டுடன், மங்கலம் ரோட்டில் இருந்து வரும் குறுக்கு ரோடுகளையும் இணைக்க வேண்டும்.
நொய்யல் ரோட்டின் தென்புறம், சாக்கடை கால்வாய் மூடி உயரமாக அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் சென்று வரும் வகையில், குறுக்கு வீதிகளுடன், நொய்யல் ரோட்டுக்கு இணைப்பை ஏற்படுத்த வேண்டும்; தேவையான அளவு, சோலார் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.