/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நொய்யல் கரையோரம் கம்பி வேலி அமைப்பு
/
நொய்யல் கரையோரம் கம்பி வேலி அமைப்பு
ADDED : ஜூன் 20, 2025 02:30 AM

திருப்பூர்,: நொய்யல் கரைப் பகுதியில் கம்பி வேலி அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நொய்யல் ஆற்றின் கரைகள் மேம்படுத்தும் பணி திட்டமிட்டு நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தில், நொய்யல் ஆறு மாசுபடுவதை தடுக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நகரில் சில இடங்களில், நொய்யல் ஆற்றுக்குள் குப்பை கழிவுகள், கட்டட கழிவுகள் ஆகியன கொண்டு சென்று கொட்டப்படுவது சகஜமாக நடந்து வந்தது.
இதனால் நொய்யல் ஆற்றுக்குள் கழிவுகள் தேங்கி மாசுபடுவதும், தேங்கி நிற்கும் கழிவுகளால் தொடர்ந்து ஆற்றில் நீர் கடந்து செல்வதும் பாதிக்கும் நிலை காணப்பட்டது.
இதற்கு தீர்வு காணும் வகையில், நொய்யல் ஆற்றினுள் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது.
நொய்யலின் பாதுகாப்பு கருதி, இதற்காக ஆற்றின் இரு கரையிலும் கம்பி வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக கரையின் ஓரத்தில் கற்கால் நட்டி, இரும்பு கம்பி வேலி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நொய்யலின் பெரும் பகுதியில் இந்த வேலி அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.
கரை மேம்பாட்டு பணிகள் நிலுவையில் உள்ள சில இடங்கள் தவிர மீதமுள்ள இடங்களில் இந்த கம்பி வேலி அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது.