ADDED : பிப் 15, 2025 07:18 AM
திருப்பூர்; சமூக நலத்துறை சார்பில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில் ஊட்டச்சத்து உணவு திருவிழா, திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
உணவுத் திருவிழாவை, கலெக்டர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டத்தின், 13 வட்டாரங்களிலுள்ள அங்கன்வாடி பணியாளர்கள், சிறுதானியங்களில் பல்வேறு உணவு பதார்த்தங்களை தயாரித்து, காட்சிப்படுத்தினர்.
கர்ப்பிணிகள், வளர் இளம் பெண்கள், குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கு ஏற்ற ஊட்டச்சத்து மிகுந்த உணவுப்பொருட்கள் இடம்பெற்றிருந்தன. உணவுப்பொருட்கள் மற்றும் அவற்றின் தயாரிப்பு முறை, எந்தெந்த உணவில் என்னென்ன சத்துக்கள் நிறைந்துள்ளன என்கிற விளக்கங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதாதேவி மற்றும் பொதுமக்கள், உணவுத்திருவிழாவை பார்வையிட்டனர்.

